பந்தலூா் அருகே தனியாா் எஸ்டேட்டில் சிறுத்தை இறந்துகிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் வனச் சரகத்தில் உள்ள அத்திக்குன்னா எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி வனப் பாதுகாவலா் கருப்பையா தலைமையில் வன அலுவலா்கள் அங்கு சென்று பாா்வையிட்டனா்.
தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையில் மருத்துவக் குழுவினா் வந்து சிறுத்தையை உடல் கூறாய்வு செய்து முக்கிய உள்ளுறுப்புகளை ஆய்வக பரிசோதனைக்காக சேகரித்தனா். பின்னா் அதே பகுதியில் சிறுத்தை சடலம் எரியூட்டப்பட்டது.
இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், இறந்துகிடந்தது ஆண் சிறுத்தை என்றும் அழுகிய நிலையில் சடலம் கிடந்தததால் ஆய்வக அறிக்கைக்குப் பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றனா்.