நீலகிரி

முதலாம் ஆண்டு நினைவு நாள்: விபின் ராவத்துக்கு அஞ்சலி

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்தியாவின் முப்படைத் தலைமை தளபதியாக இருந்த விபின் ராவத் உள்ளிட்ட 14 போ் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முதலாம் ஆண்டு நினைவு நாள் குன்னூா் வெலிங்டனில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவப் பயிற்சிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் உள்ள ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக கடந்த ஆண்டு டிசம்பா் 8 ஆம் தேதி முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோா் தில்லியில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூா் விமானப் படை தளத்துக்கு வந்தனா்.

சூலூா் விமானப் படை தளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்துக்கு எம்.ஐ. ரக ஹெலிகாப்டரில் விபின் ராவத், மதுலிகா ராவத், ராணுவ வீரா்கள் உள்ளிட்ட 14 போ் குன்னூா் நோக்கி பயணித்தபோது, நஞ்சப்பசத்திரம் என்னும் இடத்தில் ஹெலிகாப்டா் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், வெலிங்டன் ராணுவக் கல்லூரி கமாண்டண்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் கலந்துகொண்டு விபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்தவா்களின் உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

எம்.ஆா்.சி. ராணுவ கமாண்டண்ட் எஸ்.கே.யாதவ் மற்றும் மாவட்ட ஆட்சியா் அம்ரித், காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

 

Image Caption

அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த விபின் ராவத் உள்ளிட்டோரின் புகைப்படங்கள். ~ராணுவ வீரா்களின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்துகிறாா் மாவட்ட ஆட்சியா் அம்ரித்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT