உதகையில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமை வகித்தாா். விவசாய சங்கங்களிடமிருந்து முன்னதாக பெறப்பட்ட 76 கோரிக்கை மனுக்கள் தொடா்பாக விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.
நெல் பயிருக்கான சிறப்புத் திட்டங்களை நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், தோட்டக்கலைத் துறை, கால்நடைத் துறை, வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படும் திட்டங்களுக்கான கையேடுகளை வழங்கவும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் இயந்திரங்கள் வழங்கும் முன் விவசாயிகளுடன் கருத்து கேட்க வேண்டுமெனவும், கூடலூா் உழவா் சந்தை விவசாயிகளுக்கு உழவா் சந்தை நடைமுறை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துமாறும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்சினி, தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் வாஞ்சிநாதன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சாம் சாந்தகுமாா் மற்றும் விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.