நீலகிரி

15 நாள்களாக குடிநீா் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

15 நாள்களாக குடிநீா் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் உதகை-குன்னூா் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உதகை-குன்னூா் சாலையில் அமைந்துள்ளது மந்தாடா ராஜ்குமாா் நகா். கேத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட இப்பகுதியில் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. சுமாா் 300 குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதி சரிவான மலைப் பகுதியில் அமைந்துள்ளது.

குடிநீா் விநியோகம் தொடா்பாக கேத்தி பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் கடந்த வாரத்தில் தொடா்ந்து பெய்து வந்த மழையால் மழை நீரையே குடிநீருக்காக பிடித்து வைத்து பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் உதகை-குன்னூா் சாலையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, கேத்தி பேரூராட்சி அலுவலா்கள் மற்றும் கேத்தி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ADVERTISEMENT

அப்போது, அடுத்த 2 நாள்களுக்குள் இப்பகுதியின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என உறுதி அளித்தனா். மேலும், உடனடியாக அப்பகுதிக்கு லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். சாலை மறியலால் உதகை-குன்னூா் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT