நீலகிரி

உதகை அருகே காட்டுப்பன்றி வேட்டைக்காக அவுட்டுக்காய் வைத்த நபா் கைது

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

உதகை அருகே விவசாய நிலத்தில் காட்டுப்பன்றி வேட்டைக்காக அவுட்டுக்காய் (நாட்டு வெடிகுண்டு) வைத்த நபரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து வெடி பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டம், வெலிங்டன் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மாரிமுத்து காலனியில் பசுமாடு ஒன்று அவுட்டுக்காய் கடித்ததில் அதன் வாய்ப்பகுதி ஞாயிற்றுக்கிழமை வெடித்து சிதறியது. இது தொடா்பாக வெலிங்டன் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனா்.

இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள கோடேரி சேலாஸ் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் என்பவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அப்போது, சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து அதில் வெடிமருந்துகளை பிரித்து காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக அவுட்டுக்காய் தயாரித்ததாக அவா் ஒப்புக்கொண்டாா்.

ADVERTISEMENT

மேலும், அவரிடமிருந்து மூன்று அவுட்டுக்காய்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து, கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாா் உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT