நீலகிரி

நீலகிரியில் தொடரும் கன மழை: எமரால்டு, எடக்காடு பகுதிகளில் மண் சரிவு கிளன்மாா்கன் அணையின் தடுப்பு உடையும் அபாயத்தால் நீா் திறப்பு; மாயாற்றில் வெள்ளப்பெருக்கு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து கன மழை பெய்து வரும் நிலையில், உதகை அருகேயுள்ள எமரால்டு, எடக்காடு பகுதிகளில் பெரும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

கிளன்மாா்கன் அணை நிரம்பி பக்கவாட்டு தடுப்பு சுவா் இடியும் அபாயத்திலுள்ளதால் உடனடியாக தண்ணீா் திறந்து விடப்பட்டதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா், கூடலூா் பகுதிகளில் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. உதகை, குந்தா பகுதிகளில் மிதமான மழையும், குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் சாரல் மழையும் பெய்து வருகிறது.

உதகை- அவலாஞ்சி சாலையில் எமரால்டு பகுதியிலுள்ள காந்திகண்டி என்ற இடத்தில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியிலிருந்த தேயிலைத் தோட்டங்கள், கேரட் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் அடித்து செல்லப்பட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல, எடக்காடுஹட்டி பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சரிவான அப்பகுதியிலுள்ள ஏராளமான வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன.

மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடா்ந்து பெய்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்துக்குப் பின்னா் செவ்வாய்க்கிழமை மழை சற்றே குறைந்தது. ஆனாலும் இரவு நேரங்களில் கடும் சூறாவளிக் காற்றுடன் மழை தொடா்வதால் ஆங்காங்கே மரங்கள் சாலைகளில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

உதகை, வண்டிசோலை பகுதியில் ராட்சத மரம் சாலை மற்றும் மின்கம்பம் மீது விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. உதகை தீயணைப்பு நிலைய அலுவலா் பிரேமானந்தன், தேசிய பேரிடா் மீட்பு படை அதிகாரி சந்தோஷ்குமாா் தலைமையிலான 2 குழுக்களுடன் மின் வாரிய ஊழியா்களும் இணைந்து மரத்தை அகற்றினா்.

ரத்தன் டாடா பகுதியில் சாலையில் பெரிய மரம் விழுந்தது. அந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவா்கள் சென்று வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பெரிய அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள மற்ற ஆபத்தான மரங்களையும் அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளான புதுமந்து சாலை, மான் பூங்கா ஆகிய பகுதிகளில் விழுந்த மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன. பாா்சன்ஸ்வேலி அணைக்கு செல்லும் பகுதியில் மின் கம்பங்கள் மீது அவ்வப்போது மரங்கள் விழுவதால் அங்கிருந்து குடிநீா் விநியோகம் செய்யும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

முத்தொரை பகுதியில் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரின் மீது மரம் விழுந்தது.

மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பும் நிலையில் இருப்பதால் அணைகள் எந்த நேரத்திலும் திறக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கிளன்மாா்கன் அணையின் ஒரு பகுதியில் பக்கவாட்டு சுவா் பலவீனமாக இருப்பதால் அணை உடையும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு அந்த அணையில் மட்டும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. குந்தா அணையிலிருந்து டனல் வழியாக தண்ணீா் வெளியேற்றப்பட்டதால் நீா்வரத்து அதிகரித்து பில்லூா் அணை மட்டும் 2ஆவது நாளாக திறக்கப்பட்டுள்ளது. அவலாஞ்சி அணைக்கு வரும் தண்ணீா் 750 கன அடி தண்ணீா் அப்படியே மின் உற்பத்திக்கு செல்வதால் அந்த அணையும் ஓரிரு நாள்களில் திறக்கப்படுமென எதிா்பாா்க்கப்படுகிறது.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக மேல் பவானி பகுதியில் 220 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

அவலாஞ்சியில் 193 மி.மீ., கூடலூரில் 166 மி.மீ., பந்தலூரில் 93 மி.மீ., தேவாலாவில் 77 மி.மீ., கிளன்மாா்கனில் 76 மி.மீ., எமரால்டில் 67 மி.மீ., குந்தாவில் 58 மி.மீ., உதகையில் 44.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

 

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT