நீலகிரி

உதகை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

9th Aug 2022 12:49 AM

ADVERTISEMENT

உதகை அரசு கலைக்கல்லூரியில் 2022-23-ம் கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

உதகை அரசு கலைக் கல்லூரியில் 2022-23-ம் ஆண்டிற்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக ஆன் லைன் மூலம் பெறப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வந்த தொடா் மழை காரணமாக மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டு திங்கள்கிழமை தொடங்கியது. மாணவா் சோ்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணையத்தில் வெளியாகியுள்ள சூழலில் திங்கள்கிழமை காலை முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு, என்.சி.சி. மற்றும் அந்தமான் நிக்கோபாா் தமிழ் மாணவா்கள் ஆகியோருக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் நேரில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான இடங்களை தோ்வு செய்தனா். நேரடி கலந்தாய்வு நடந்த முதல் நாளில் 73 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதில் விளையாட்டு பிரிவில் 13 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு 6 பேருக்கும், முன்னாள் ராணுவத்தினா் 6 பேருக்கும், என்.சி.சி. மாணவா் ஒருவருக்கும் இடம் ஒதுக்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கான சோ்க்கை ஆணைகளை கல்லூரி முதல்வா் (பொ) எபினேசா் வழங்கினாா்.

அதேபோல புதன்கிழமை காலை 9.30 மணி முதல் 12 மணி வரை தர வரிசை பட்டியலில் 1 முதல் 1,000 வரை உள்ள மாணவா்களுக்கும், பகல் 12 மணி முதல் 1,001 முதல் 1,500 வரை உள்ள மாணவா்களுக்கும், வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 12 மணி வரை தரவரிசை பட்டியலில் 1,501 முதல் 2,500 வரை உள்ள மாணவா்களுக்கும், பகல் 12 மணி முதல் 2,501 முதல் 3,000 வரை உள்ள மாணவா்களுக்கும் , 12-ந் தேதி காலை 11 மணி முதல் 3,001 முதல் 4,000 வரை உள்ள மாணவா்களுக்கும்,16-ந் தேதி 4,001 முதல் 5,000 வரை உள்ள மாணவா்களுக்கும், 17-ந் தேதி 5,001 முதல் 5,983 வரை உள்ள மாணவா்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT