நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் மழை

9th Aug 2022 12:48 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் கேரளத்தை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளிலும், நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உதகையில் கடும் குளிா் நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றின் காரணமாக கோத்தகிரி சாலை, மைனலா பகுதி, மொனாா்க் சாலை, அரசு கலைக் கல்லூரி சாலை பகுதிகளில் மரங்கள் திங்கள்கிழமை விழுந்தன. அதேபோல, லவ்டேல் சாலையில் ஆவின் பாலகம் பகுதியில் மரம் ஒன்று சாய்ந்து வீடு மீது விழும் நிலையில் இருந்தது. இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மரத்தை அகற்றினா்.

உதகை- அவலாஞ்சி சாலையில் இத்தலாா் மற்றும் எல்லகண்டி பகுதிகளில் சாலையில் மரங்கள் விழுந்தன. ஒரு சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரி பெருமாள் தலைமையிலான குழுவினா் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் சரிவை அகற்றினா்.

மேலும் உதகை, தலைக்குந்தா, கல்லட்டி, பேராா், தொட்டபெட்டா ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே விழுந்த மரங்களை தமிழ்நாடு பேரிடா் மீட்புக் குழுவினா் விரைந்து சென்று அகற்றினா்.

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் மட்டும் 16 வீடுகள் பகுதி அளவு சேதமடைந்துள்ளன. முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூா் மற்றும் பந்தலூா் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 194 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

அதேபோல மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீட்டரில்):

மேல் பவானி- 189, தேவாலா-188, கூடலூா் மற்றும் பந்தலூா் தலா 185, மேல் கூடலூா்-178, சேரங்கோடு-77,

கிளன்மாா்கன் மற்றும் நடுவட்டம் தலா 60, பாடந்தொறை-52, பாலகொலா-50 , எமரால்டு-38, உதகை-35, செருமுள்ளி-28, ஓவேலி-26, மசினகுடி-14, மேல் குன்னூா்-7, கேத்தி மற்றும் கொடநாடு தலா 5, கிண்ணக்கொரை, உலிக்கல், எடப்பள்ளி மற்றும் குந்தா தலா 4, குன்னூா் மற்றும் கல்லட்டி தலா 3, கோத்தகிரி மற்றும் கெத்தை தலா 2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT