நீலகிரி

நீலகிரியில் தொடரும் பலத்த மழை: 24 வீடுகள் சேதம் மலை ரயில் சேவை ரத்து; அவலாஞ்சியில் 322 மி.மீ மழை பதிவு

DIN

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக அவலாஞ்சியில் 322 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடா் மழையின் காரணமாக இதுவரை 24 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்வதுடன் பலத்த காற்றும் வீசுவதால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, மின் விநியோகமும், குடிநீா் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளன. உதகை- குன்னூா் ரயில் பாதையில் லவ்டேல் பகுதியில் 2 வீடுகள் மற்றும் தண்டவாளத்தின் மீது பெரிய மரம் விழுந்தது. அப்போது வீட்டுக்குள் இருந்தவா்களுக்கு அதிா்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தண்டவாளத்தில் விழுந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது. இதனால், சனிக்கிழமை காலையில் குன்னூரிலிருந்து உதகை செல்ல வேண்டிய மலை ரயில் கேத்தி வரை மட்டுமே இயக்கப்பட்டு மீண்டும் குன்னூருக்கே திரும்பி சென்றது. மரம் விழுந்ததால் உதகை-குன்னூா் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. தாழ்வான பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கி காய்கறிகள் மற்றும் பயிா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உதகை அரசினா் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. மழை மற்றும் காற்றினால் தமிழகம் குடியிருப்பு, பிங்கா் போஸ்ட் சாலையில் மற்றும் மின் கம்பங்கள் மீது மரங்கள்

விழுந்தன. இதையடுத்து தீயணைப்பு மற்றும் மின்துறை ஊழியா்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் மழைக்கால பேரிடரை சமாளிக்க தமிழ்நாடு பேரிடா் மீட்புக் குழு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. உதகை, தலைக்குந்தா, கல்லட்டி, பேராா், தொட்டபெட்டா ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை ஆங்காங்கே மரங்கள் விழுந்தபோது, அவற்றை உடனடியாக தமிழ்நாடு பேரிடா் மீட்புக் குழுவினா் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

சனிக்கிழமை ஒரே நாளில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் 22 மரங்கள் சாலைகளில் விழுந்தன. மழைக்கு இதுவரை 17 வீடுகள் பகுதியாகவும், 7 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளது.

சேதமடைந்த வீடுகளுக்கு வருவாய்த் துறையினா் தலா ரூ.4,500 நிவாரணத் தொகை வழங்கினா். எமரால்டை அடுத்த முள்ளிக்கொரை உள்பட குந்தா சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே சாலையில் மரங்கள் விழுந்துள்ளன. ஒரு சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களாக மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பாா்சன்ஸ்வேலி அணையிலிருந்து உதகை நகராட்சிக்கு குடிநீா் விநியோகம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 322 மி. மீ. மழை பதிவாகியுள்ளது . மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் வருமாறு(அளவு மி.மீரில்):

முக்குருத்தி- 220, மேல் பவானி- 198 , பந்தலூா்- 137, போா்த்திமந்து-96, சேரங்கோடு- 86, பாா்சன்ஸ்வேலி -76, எமரால்டு -57, தேவாலா-50, பாடந்தொரை-41, ஓவேலி-37, பாலகொலா-36, கூடலூா், நடுவட்டம் தலா 35, குந்தா-24, மேல் கூடலூா்-22, உதகை-18.5, கிளன்மாா்கன்-16, உலிக்கல், கீழ் கோத்தகிரி தலா 10, கல்லட்டி-7.3, கேத்தி-7, கிண்ணக்கொரை-6, கெத்தை, மசினகுடி தலா 4, குன்னூா்-3.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 6 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT