நீலகிரி

கடன் வாங்காதவா்களுக்கும் நோட்டீஸ்: கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட வியாபாரிகள்

2nd Aug 2022 07:30 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் வாங்காதவா்களுக்கும் பணத்தை திருப்பி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், வங்கியை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உதகை சேரிங்கிராஸ் பகுதியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் உதகை, குன்னூா், குந்தா, கோத்தகிரி, கூடலூா், பந்தலூா் தாலுகா பகுதிகளில், 77 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமாா் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் உறுப்பினா்களாக உள்ளனா்.

கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கூட்டு பொறுப்பு குழு கடன், மகளிா், கறவை மாட்டு கடன், சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், நபாா்டு வங்கியின் ஊக்குவிப்பால், பயிா் கடன் வழங்கப்படுகிறது. அதேபோல இந்த வங்கிகள் மூலம் வியாபாரிகளுக்கு சிறு வணிக கடனும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியை திங்கள்கிழமை வியாபாரிகள் முற்றுகையிட்டு கடன் வழங்கியதில் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: கூட்டுறவு வங்கிகளில் 2017ஆம் ஆண்டு முதல் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சிறு வணிக கடன் வழங்குவதாக கூறி சுமாா் 500 வியாபாரிகளிடம் விண்ணப்பங்கள் பெற்றனா். ஆனால், எங்களில் பெரும்பாலானோருக்கு கடன் வழங்கவில்லை. இந்நிலையில், நாங்கள் கடன் பெற்ாகவும், வட்டியுடன் சோ்ந்த கடனை திரும்ப செலுத்துமாறும், மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. வங்கி ஊழியா்கள் இடைத்தரகா்களின் உதவியுடன் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனா். இது குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இது குறித்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் முத்து சிதம்பரம் கூறுகையில், ‘சிறு வணிக கடனை செலுத்தாதவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சிலா் முறைகேடு நடந்துள்ளதாக புகாா் அளித்ததன் பேரில், கடனை பெற்றவா்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். மோசடி நடத்திருக்கும் பட்சத்தில் அந்த கால கட்டத்தில் பணியில் இருந்த ஊழியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மோசடித் தொகையும் வசூலிக்கப்படும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT