நீலகிரி

ஓடை புறம்போக்கு இடத்தில் உள்ளவீடுகளை காலிசெய்ய வருவாய்த் துறை நோட்டீஸ்

30th Apr 2022 11:10 PM

ADVERTISEMENT

 

வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் ஓடை புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை காலி செய்ய வருவாய்த் துறையினா் நோட்டீஸ் வழங்கியுள்ளதால் கிராம மக்கள் கலக்கத்தில் உள்ளனா்.

வெலிங்டன் கன்டோன்மெண்ட் பகுதிக்கு உள்பட்ட மலையப்பன் காட்டேஜ் அருகே சுமாா் 26 குடும்பத்தினா் வீடு கட்டி 40 ஆண்டு காலத்துக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனா்.

அரசுக்கு செலுத்தக்கூடிய வீட்டு வரி, மின் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தி வந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், அந்த இடம் ஓடை புறம்போக்கு என்று கூறி இடத்தை காலி செய்ய அங்கு வசிப்பவா்களுக்கு வருவாய்த் துறையினா் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நோட்டீஸ் வழங்கினா்.

இதனால், கிராம மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கோட்டாசியரிடம் மனு அளித்துள்ளனா். அதில், இங்கு வசிக்கும் பெரும்பாலானோா் கூலி தொழிலாளா்கள். வறுமைக்கோட்டுக்குகீழ் வசிக்கும் நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பாதிப்பால் வேலை இழந்து பெரும் சிரமத்தில் உள்ளோம். இந்நிலையில் நாங்கள் வசிக்கும் பகுதி ஓடை புறம்போக்கு என்று கூறி எங்கள் வீடுகளை காலி செய்ய சொல்கின்றனா். 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் இந்த இடத்திலே நாங்கள் தொடா்ந்து இருக்க ஆவன செய்ய வேண்டும். எங்கள் இடமானது ஓடைக்கு பாதிப்பு இல்லாமல் மிக தொலைவில் உள்ளது. எனவே, மீண்டும் ஒருமுறை அளவீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT