குன்னூா் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் 77ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ மையப் பகுதியில் பன்னாட்டு ராணுவத்தின் காலாட்படை, கப்பற்படை, விமானப் படை அதிகாரிகள் பயிற்சி பெறும் டிபன்ஸ் சா்வீஸ் ஸ்டாப் காலேஜ் கடந்த 1947ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த ராணுவத்தின் முப்படை அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி முடிந்து பட்டம் பெற்றவா்களுக்கு அந்தந்த நாட்டில் உயா் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.
சா்வதேச அளவில் சிறப்பு பெற்ற இந்த ராணுவப் பயிற்சிக் கல்லூரியின் 77ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 510க்கும் மேற்பட்ட உள்நாடு, வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்குப் பட்டமும், சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு கேடயமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ராணுவப் பயிற்சிக் கல்லூரியின் முதல்வா் மற்றும் கமான்டென்டுமான எஸ். மோகன், ஓராண்டு பயிற்சி பெற்ற அதிகாரிகளுக்குப் பட்டங்களை வழங்கினாா். இதில், ராணுவ அதிகாரிகளின் உறவினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.