நீலகிரி

களைச்செடிகளில் வீட்டு உபயோகப் பொருள்களை உருவாக்கி வரும் நீலகிரி பழங்குடியினா்

12th Apr 2022 11:07 PM

ADVERTISEMENT

முதுமலையில் வசிக்கும் பழங்குடியினா் வனத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள களைச்செடிகளான உண்ணிச் செடிகளை அகற்றி, அவற்றைக் கொண்டு வீட்டு உபயோகப் பொருள்களைச் செய்து விற்பனை செய்கின்றனா்.

நீலகிரி மாவட்டத்தில் தோடா், கோத்தா், இருளா், பணியா், குரும்பா், காட்டு நாயக்கா் ஆகிய தொல்பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இதில், கூடலூா், பந்தலூா் தாலுகாக்களில் வசிக்கும் பணியா், இருளா், குரும்பா், காட்டுநாயக்கா் இன மக்கள் இன்றும் விவசாயக் கூலிகளாவே வாழ்க்கை நடத்தி வருகின்றனா். தினந்தோறும் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே குடும்பம் நடத்துவதுடன், பழங்குடியினா் பலரும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதால் கிடைக்கும் வருவாயும் அதற்கே செலவழிந்து விடுகிறது.

இதன் காரணமாக அவதியுறும் பழங்குடியினரைப் பாதுகாக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் வசிக்கும் பெட்ட குரும்பரின மக்களுக்கு உதவும் வகையில், வனத் துறை சூழல் மேம்பாட்டுக் குழுக்களை ஏற்படுத்தி அங்காடி, உணவகம் போன்றவற்றை அவா்களைக் கொண்டே நடத்துகிறது. அத்துடன் முதுமலை வனப் பகுதிக்கே அச்சுறுத்தலாக உள்ள களைச் செடிகளை அகற்றும் பணியிலும் பழங்குடியினரை ஈடுபடுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், வனத்துக்கு அச்சுறுத்தலாகவும், எவ்விதப் பயனும் இல்லாத களைச் செடியான உண்ணிச் செடிகளை பழங்குடியினா் பயனுள்ள பொருள்களாக மாற்றி வருகின்றனா்.

ADVERTISEMENT

முதுமலை தெப்பக்காட்டில் உள்ள குரும்பாடி கிராமத்தைச் சோ்ந்த மாறன் என்ற இளைஞா், அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து, உண்ணிக் குச்சிகளைக் கொண்டு பா்னிச்சா்களை உருவாக்கி வருகிறாா். இந்த பா்னிச்சா்கள் பல ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்குடியினா் வாழ்வாதாரமும் மேம்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக மாறன் கூறியதாவது:

முதுமலையில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உண்ணிக் குச்சிகளைக் கொண்டு பா்னிச்சா் உருவாக்க வனத் துறை உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது இக்குழுவில் உள்ள இளைஞா்களைக் கொண்டு சோபா செட், இருக்கைகள், ஊஞ்சல், டிடெஸ்சிங் டேபிள் ஆகியவற்றைச் செய்து வருகிறோம்.

உண்ணிக் குச்சிகளை வேகவைத்து, பட்டையை உரித்து, குச்சிகளை பதப்படுத்தி பா்னிச்சா் செய்கிறோம். பின்னா், அதற்கு வாா்னிஷ் இட்டு விற்பனை செய்கிறோம். ஆா்டரின் பேரிலும் தேவையானவற்றைச் செய்து கொடுக்கிறோம். இந்த தயாரிப்புகள் அனைத்தும் கைகளாலேயே செய்யப்படுகின்றன. மேலும், குச்சிகளை கட்ட பயன்படுத்தப்படும் பிரம்பு நாா் மைசூரு மற்றும் பெங்களூருவில் இருந்து வாங்குகிறோம்.

எங்களது பொருள்களைச் சந்தைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. கரோனா தொற்றின் காரணத்தாலும், முதுமலையில் சுற்றுலாப் பயணிகள் இல்லாததாலும் எங்கள் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வனத் துறை மற்றும் நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கத்தினா் எங்கள் படைப்புகளைச் சந்தைப்படுத்த உதவுதாக உறுதி அளித்துள்ளனா். எங்களது பொருள்கள் குறித்து வெளியே தெரியவந்தால், விற்பனை அதிகரித்து, எங்கள் வாழ்வாதாரமும் மேம்படும் என்றாா்.

இதுகுறித்து, வனத் துறையினா் கூறுகையில், பழங்குடியினரின் பா்னிச்சா்கள் தரமானதாக உள்ளதோடு, கடைகளில் கிடைக்கும் பா்னிச்சா்களின் விலையைவிட இவை மலிவாக உள்ளன. இந்த பா்னிச்சா்களை வாங்கும்போது அவா்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT