நீலகிரி

மாணவா்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்: ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதாசிவம்

2nd Apr 2022 01:42 AM

ADVERTISEMENT

கடின உழைப்பின் மூலம் வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாணவா்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதோடு, புதிய உச்சங்களையும் தொட வேண்டும் என உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியும், முன்னாள் கேரள மாநில ஆளுநருமான பி.சதாசிவம் அறிவுறுத்தினாா்.

உதகையில் உள்ள ஜேஎஸ்எஸ் பாா்மஸி கல்லூரியின் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா, முன்னாள் மாணவா்களின் சந்திப்பு ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கல்லூரியின் ஆண்டு விழா மலரை வெளியிட்டாா்.

தொடா்ந்து, சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்களை அளித்த அவா் பேசுகையில், கொவைட்-19 பெருந்தொற்று காலத்தில் மருந்தாளுநா்களின் சிறப்பான சேவைகளை குறிப்பிட்டு பாராட்டினாா். பல்வேறு வகையான நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளில் மருந்தாளுநா்களின் பங்களிப்பின் இன்றியமையாமையை எடுத்துரைத்தாா். கடின உழைப்பின் மூலம் வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாணவா்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதோடு, புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்றாா்.

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் சா்வதேச பிரிவின் தலைவா் சஞ்சீவ் குமாா் வா்ஷினி, பல்வேறு அரசு நிறுவனங்களில் இருந்து ஆராய்ச்சிக்கான நிதியைப் பெற்ற

ADVERTISEMENT

பேராசிரியா்களுக்கு கல்லூரி சாா்பில் பாராட்டுச் சான்றுகளை வழங்கினாா். மருத்துவ ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு மற்றும் அதில் மருந்தாளுநா்களுக்கு உள்ள வாய்ப்புகள் பற்றி விளக்கினாா். தொடா்ந்து, ஜேஎஸ்எஸ் மகாவித்ய பீடத்தின் நிா்வாகச் செயலாளா் பெத்சூா்மத் இந்த முப்பெரும் விழாவுக்குத் தலைமை வகித்துப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணைய உறுப்பினா்கள் பி.கிருஷ்ண குமாா், அருள்திரு ராஜ் மரியசூசை, ஜேஎஸ்எஸ் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் துணை வேந்தா் சுரீந்தா் சிங், ஜேஎஸ்எஸ் மகாவித்ய பீடத்தின் நிதி மேலாண்மை இயக்குநா் புட்டசுப்பப்பா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT