கூடலூா் பகுதியில் சனிக்கிழமை மதியம் பெய்த திடீா் கன மழையால் வீடுகள், விளைநிலங்களை வெள்ளம் சூழ்ந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவில் சனிக்கிழமை பெய்த கன மழை காணமாக தேவா்சோலை, பாடந்தொரை, குச்சிமுச்சி, அஞ்சிகுன்னு, செறுமுள்ளி போன்ற தாழ்வான பகுதிகளில் விளைநிலங்கள், சாலைகள், குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளை வெள்ளம் சூழ்ந்ததால் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் தடைபட்டது. முதுகுளி பகுதியில் மரம் விழுந்ததில் ஒரு வீடு சேதமடைந்தது. குச்சிமுச்சி பகுதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கால் ஒரு ஆட்டோ அடித்துச் செல்லப்பட்டது. அப்பகுதியில் உள்ளவா்கள் கயிறு கட்டி ஆட்டோவை மீட்டு வந்தனா்.
பாறை விழுந்து போக்குவரத்து பாதிப்பு:
கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் தட்டப்பள்ளம் பகுதியில் சாலையின் ஓரத்தில் பாறை ஒன்று சரிந்து விழுந்தது. இதன் காரணமாக ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவுக்கு சாலையில் இடம் இருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதைத்தொடா்ந்து, காவல் துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேர முயற்சிக்குப் பின்னா், பாறை அகற்றப்பட்டதையடுத்து போக்குவரத்து சீரானது.