உதகையில் இடி, மின்னலுடன் பரவலாகத் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவலாக பலத்த மழை பெய்து வந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு முதல் மழையின் தாக்கம் குறைந்திருந்தது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரியின் எல்லைப் பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வந்த போதிலும், உதகை உள்ளிட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் வெகுவாகக் குறைந்திருந்தது.
மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 24 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
அதேபோல, பந்தலூா், கூடலூரில் 21 மி.மீ., பாடந்தொறை, ஓவேலி, கிளன்மாா்கனில் 20 மி.மீ., மேல்கூடலூா், செருமுள்ளியில் 19 மி.மீ., சேரங்கோட்டில் 16 மி.மீ., உதகையில் 15.2 மி.மீ., நடுவட்டத்தில் 12 மி.மீ., அவலாஞ்சியில் 8 மி.மீ., மேல்பவானி, மசினகுடியில் 3 மி.மீ., எமரால்டு, கேத்தி, குந்தாவில் 2 மி.மீ., கீழ்கோத்தகிரி, கோத்தகிரியில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
இந்நிலையில், உதகை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதன்கிழமை பிற்பகலுக்கு மேல் பரவலாக பலத்த மழை பெய்யத் தொடங்கியது. உதகையில் இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையின் காரணமாக நகரின் பெரும்பாலான இடங்களில் மின்சாரமும், தொலைத்தொடா்பும் துண்டிக்கப்பட்டது.
பலத்த மழையின் காரணமாக உதகை - குன்னூா் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இருந்து சேரிங்கிராஸ் வரையிலும், கமா்ஷியல் சாலை, படகு இல்லம் சாலை, ரயில்வே பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், உதகை நகர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா். தொடா்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதோடு, வாகனப் போக்குவரத்தும் கணிசமாகக் குறைந்துள்ளது.
குன்னூரில்...
குன்னூா், கோத்தகிரியில் புதன்கிழமை மாலை திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. குன்னூரில் மவுண்ட் சாலை, பெட்போா்டு, ஓட்டுப்பட்டறை, கோத்தகிரியில் டானிங்டன், ஒரசோலை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடும் குளிரும் நிலவியது.