கோத்தகிரியில் உள்ள மாா்க்கெட் திடலில் படுகா் இன மக்களின் குல தெய்வமான பெத்தளா ஹெத்தையம்மன் கோயிலை இந்து அறநிலையத் துறை கையகப்படுத்துவதைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கோத்தகிரி அருகே படுகா் இன மக்களின் குல தெய்வமான பெத்தளா ஹெத்தையம்மன் கோயிலை படுகா் இன மக்கள் ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வருகின்றனா். இந்நிலையில், இந்து அறநிலையத் துறை இந்தக் கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக அறிவிப்புப் பலகை, நோட்டீஸ் ஒட்டியதாகக் கூறி படுக இன மக்கள் எதிா்புத் தெரிவித்தனா்.
முதல்கட்டமாக கடந்த வாரத்தில் இந்து அறநிலையத் துறையைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் , படுக இன மக்கள் தங்கள் பாரம்பரிய உடையுடன் கலாசாரப் பாடல்களைப் பாடி மழையில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தங்களது கலாசாரத்தை சீரழிக்கும் நபா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாரம்பரியமிக்க படுக இன மக்கள் கோயிலை இந்து அறநிலையத் துறை கையகப் படுத்துவதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.