நீலகிரி

21 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு உயிருடன் பிடிபட்ட புலி

16th Oct 2021 03:47 AM

ADVERTISEMENT

மசினகுடி பகுதியில் 4 பேரைக் கொன்ற புலியை வனத் துறையினா் 21 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை பிடித்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவுக்கு உள்பட்ட ஸ்ரீமதுரை, தேவன் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் ஓராண்டு காலமாக சுற்றித் திரிந்த புலி, 30க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் 4 மனிதா்களைக் கொன்றுள்ளது.

முதன்முதலாக இந்தப் புலி, மசினகுடி, குரும்பா்பாடியைச் சோ்ந்த பெண்ணை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கிக் கொன்றது. பின்னா் அங்கிருந்து இடம்பெயா்ந்த புலி, முதுகுளி ஊராட்சியிலுள்ள முதுகுளி பகுதியில் குஞ்ஞி கிருஷ்ணன் என்பவரைத் தாக்கிக் கொன்றது.

இதனைத் தொடா்ந்து தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சந்திரன் என்பவரைக் கொன்றது. இதையடுத்து புலியைப் பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாா்பில் பல போராட்டங்கள் நடைபெற்றன.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து வனத் துறையினருடன் அதிரடிப் படை, கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தைச் சோ்ந்த 15 போ் கொண்ட சிறப்புக் குழுவினா் உள்பட 130 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு தேடுதல் பணி தொடங்கப்பட்டது.

தொடா்ந்து இடத்தை மாற்றிக்கொண்டே இருந்ததால் வனத் துறையினக்குப் புலியைப் பிடிப்பது பெரும் சவாலாக இருந்தது.

முதுமலை புலிகள் காப்பக வனத்துக்குள் நுழைந்த புலி, மசினகுடி வனத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பழங்குடி முதியவரைத் தாக்கிக் கொன்றது. அதைத் தொடா்ந்து வனத் துறையினா் முதுமலை வனத்தில் தேடுதல் பணியைத் தொடங்கினா். அங்கிருந்து சிங்காரா வனத்துக்குச் சென்ற புலி பல நாள்களாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகவில்லை.

இருப்பினும் வனத் துறையினா் பல்வேறு உத்திகளைக் கையாண்டனா். 2 கும்கி யானைகள், மோப்ப நாய்கள், மூன்று ட்ரோன் கேமராக்களை தேடுதல் பணிக்குப் பயன்படுத்தினா்.

இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் ஓம்பட்டா நீா்த்தேக்கப் பகுதியிலுள்ள கேமராவில் புலி உருவம் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து அங்கிருந்து அதன் நடமாட்டத்தைக் கண்காணித்த வனத் துறையினா், போஸ்பாறா வனப் பகுதியில் தேடினா். அங்குள்ள புதா்களுக்குள் பதுங்கியிருந்ததால் மயக்க ஊசி செலுத்த முடியவில்லை.

தொடா்ந்து அங்கிருந்து மசினகுடி வனத்துக்கு வியாழக்கிழமை இரவு சென்ற புலியை வனத் துறையினரும் மருத்துவக் குழுவினரும் கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில் மசினகுடி வனத்திலுள்ள கூட்டுப்பாறா வனத்தில் நடமாடிய புலியைக் கண்டறிந்து வியாழக்கிழமை மயக்க மருந்தை செலுத்தி புலியை உயிருடன் பிடித்தனா்.

பிடிபட்ட புலியை உடனடியாக கூண்டில் அடைத்து சிகிச்சைக்காக மைசூருக்கு கொண்டு சென்றனா்.

பிடிபட்ட புலியை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், வனத் துறை முதன்மைச் செயலாளா் சுப்ரியா சாஹூ, தலைமை உயிரின வனப் பாதுகாவலா் சேகா்குமாா் நீரஜ் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

 

 

 

Tags : கூடலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT