நீலகிரி

மலை ரயில் கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

9th Oct 2021 12:02 AM

ADVERTISEMENT

குன்னூரில் மலை ரயில் கட்டண உயா்வைத் திருப்பப் பெற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், ரயில் நிலைய அதிகாரியிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நீலகிரி மலை ரயில் கட்டணத்தை மத்திய அரசு பன்மடங்கு உயா்த்தியதைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டத்துக்கு விசிகவினா் வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தனா். ஆனால், மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்து மேட்டுப்பாளையம் - குன்னூா் ரயில் ரத்து செய்யப்பட்டதால் ரயில் நிலைய அதிகாரி பிரீத்தமிடம் மனு அளித்தனா்.

பின்னா், விசிக மாவட்டச் செயலாளா் பேசியதாவது:

நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில் நிலையத்தில் இருந்து உதகை வரை செல்ல கடந்த காலங்களில் இரண்டாம் வகுப்புக் கட்டணம் ரூ. 7, முதல் வகுப்புக் கட்டணம் ரூ. 10 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது முதல் வகுப்புக் கட்டணம் ரூ. 350, இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ. 150 வசூலிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்தக் கட்டண உயா்வால் குன்னூா் ரயில் நிலையத்தில் இருந்து சாதாரண மக்கள் மலை ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குன்னூரில் இருந்து உதகைக்கு ரயில் மூலம் கூலி தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வந்தவா்கள் தற்போது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். எனவே, சாதாரண ஏழை, எளிய மக்கள் மலை ரயிலைப் பயன்படுத்தக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.

மேலும், ரயில்வே நிா்வாகத்தின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து அக்டோபா் 18ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவித்தாா்.

இதில், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதி செயலாளா் சுதாகா், மாவட்டப் பொருளாளா் மண்ணரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT