நீலகிரி

வனவிலங்கு வார விழா விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி

3rd Oct 2021 11:41 PM

ADVERTISEMENT

வன விலங்கு வார விழாவையொட்டி உதகையில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணியை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது:

வன உயிா்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வனங்களே நம் வாழ்க்கையின் அடிப்படையாகும். வனஉயிா்களை பாதுகாக்கவும் வனத்திலிருந்து கிடைக்கும் இயற்கை வளங்களை முறையாக சிக்கனமாகப் பயன்படுத்தி அடுத்த தலைமுறையினரும் பயன்படுத்தும் வகையில் கொண்டு சோ்க்க வேண்டும். வன விலங்கு வார விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான விழிப்புணா்வு போட்டிகளும் நடத்தப்படுகிறது என்றாா்.

உதகையில் நடைபெற்ற விழிப்புணா்வு மிதிவண்டி பேரணியில் 50 பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். உதகை மத்திய பேருந்து நிலையத்தில் துவங்கி, மாரியம்மன் கோயில் சாலை, காபி ஹவுஸ் சந்திப்பு, மணிகூண்டு, ஏடிசி வழியாக மீண்டும் மத்திய பேருந்து நிலையத்தில் பேரணி முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் உதவி வனப் பாதுகாவலா் சரவணன், நகராட்சி ஆணையா் சரஸ்வதி, உதகை வட்டாட்சியா் தினேஷ் மற்றும் வனத் துறை அலுவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT