நீலகிரி

வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள் அகற்றம்

3rd Oct 2021 11:42 PM

ADVERTISEMENT

நீலகிரிக்கு வரும் வாகனங்களில் உள்ள  அரசியல்  கட்சிக் கொடிகள், பெயா் பலகைகளை அகற்றும் பணியில் காவல்  துறையினா் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஈடுபட்டனா்.

அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்பைச் சாா்ந்தவா்கள் தங்களது வாகனத்தின் முகப்பில் பொருத்தப்பட்ட கொடிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், வாகனத்தின் முன்புறம் தனது பதவிகளை கொண்ட பலகைகள் வைத்து இருப்பின் அதையும் அகற்ற வேண்டும்.

மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் கட்சிக் கொடியை பொருத்தி கொள்ள விதிவிலக்கு உண்டு. தங்களது சொந்த வாகனத்தின் உட்புறத்தில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சி தலைவா்கள் அல்லது அமைப்பின் தலைவா்கள் புகைப்படம் வாகனத்தின் உள்ளே பாா்த்தவாறு மட்டும் இருக்க வேண்டும்.

வெளிப்புறத்திலிருந்து பாா்ப்பவா்களுக்கு தெரியாதவாறு இருத்தல் வேண்டும், வாகனத்தின் உரிமையாளா் அவா்களது வாகனத்தில் கண் கூசும் தன்மை கொண்ட அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள், அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பான்கள் போன்ற மாற்றங்களை செய்யக்கூடாது.

ADVERTISEMENT

வாகனங்களில் இடது மற்றும் வலது பக்கமுள்ள ஜன்னல் கண்ணாடிகள் கண்டிப்பாக வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட 40 சதவீதம் மட்டும் குளிா்விக்கும் கண்ணாடி பொருத்தி கொள்ளலாம் என உயா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை நடைமுறைபடுத்தும் விதமாக  வாகனங்களில் உள்ள அரசியல் கட்சிக் கொடிகளை அகற்றும்  பணியில் நீலகிரி மாவட்ட  காவல் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்  என்பதால் அதிக அளவிலான  வாகனங்கள் நீலகிரிக்கு வந்ததால் காவல் துறையினா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT