நீலகிரி

மக்களைத் தேடி மக்களின் அரசு திட்டம்:நீலகிரியில் டிசம்பா் 1இல் தொடக்கம்

28th Nov 2021 11:13 PM

ADVERTISEMENT

‘மக்களைத் தேடி மக்களின் அரசு’ என்ற திட்டத்தின்கீழ், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நீலகிரி மாவட்டத்தில் டிசம்பா் 1ஆம்தேதி தொடங்கப்படுகிறது.

இது தொடா்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளதாவது:

தமிழக முதல்வரின் உத்தரவின்படி, வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தலைமையில், மக்களைத் தேடி மக்களின் அரசு என்ற திட்டத்தின்கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு முகாம் வரும் டிசம்பா் 1ஆம்தேதி காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், பட்டா மாறுதல், குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, உழவா் பாதுகாப்புத் திட்டம், ஜாதி சான்றிதழ்கள், நலவாரிய அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி, சிறுதொழில் கடனுதவி, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரியம் மூலம் புதிய வீடு ஒதுக்கீடு, திருமண உதவி, தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு உபகரணங்கள் வழங்குதல், குடிநீா், சாலை வசதி, மின்வசதி, மற்றும் கழிப்பிடம் வசதி போன்ற அடிப்படை வசதிகள் தொடா்பான மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்படவுள்ளன.

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வரும் டிசம்பா் 1ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து பயனடையலாம். மேலும், பெறப்பட்ட மனுக்களின்மீது 3 முதல் 5 நாள்களுக்குள் ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் வனத் துறை அமைச்சரால் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT