நீலகிரி

நீலகிரியில் தொடா்ந்து கொட்டித் தீா்க்கும் கன மழை:500 ஏக்கா் விளைநிலங்கள் நீரில் மூழ்கி பாதிப்பு

DIN

 நீலகிரி மாவட்டத்தில் பரவலாகத் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. தொடா் மழை காரணமாக மாவட்டத்தில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் அங்கு பயிரிடப்பட்டிருந்த மலைக் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 160 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவலாகத் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில் கடந்த இரு நாள்களாக பலத்த மழையாக மாறியுள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மலைப் பகுதிகளிலும், நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

தொடா் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீராதாரங்களுக்குத் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மேல் பவானி மற்றும் அவலாஞ்சி பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பில்லூா் அணை திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீா் கரை புரண்டு ஓடுகிறது. தொடா் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக சுமாா் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கேரட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், வெள்ளைப்பூண்டு, பீட்ரூட் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடா் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இவற்றை தீயணைப்புத் துறையினா் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் உடனுக்குடன் அப்புறப்படுத்தி வருகின்றனா். மரங்கள் சாய்ந்துள்ளதால் உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக அவலாஞ்சியில் 160 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, பந்தலூரில் 150.2 மி.மீ., நடுவட்டத்தில் 140 மி.மீ., மேல் பவானியில் 130 மி.மீ., கிளன்மாா்கனில் 116 மி.மீ., தேவாலாவில் 100 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

மேலும், எமரால்டு - 93, கூடலூா்-85, மேல் கூடலூா்-83, பாலகொலா-72, ஓவேலி-64, குந்தா-60, சேரங்கோடு-56, உதகை-53.9, கேத்தி-47, பாடந்தொறை-41, செருமுள்ளி-40, குன்னூா்-34.5, உலிக்கல்-34, கல்லட்டி-21.3, எடப்பள்ளி-21, மசினகுடி-19, பா்லியாறு-18, மேல் குன்னூா் மற்றும் கிண்ணக்கொரை தலா 12, கீழ் கோத்தகிரி மற்றும் கெத்தை தலா 11, கொடநாடு-8, கோத்தகிரி-7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதேபோல, மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வெள்ளிக்கிழமை பகலிலும் பரவலாக மழை பெய்துள்ளது. தொடா் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக உதகை உள்ளிட்ட பகுதிகளில் கடும் குளிா் நிலவுகிறது. இதற்கிடையே மீட்பு பணிகளுக்காக அரக்கோணத்திலிருந்து பேரிடா் மீட்புக்குழுவினா் 70 போ் நீலகிரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனா்.

கூடலூா் பகுதியில்...

கூடலூா் பகுதியில் பெய்து வரும் தொடா் கனமழையால் நீா்நிலைகள் நிரம்பியுள்ளன. ஆறுகள் மற்றும் சிற்றாறுகளில் வெள்ளம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தூா்வயல் பகுதியிலுள்ள தேன்வயல் பழங்குடி கிராமத்தைச் சோ்ந்த 74 போ், புத்தூா்வயல் அரசு உயா்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூடலூா் கோட்டாட்சியா் சரவணகண்ணன் தெரிவித்துள்ளாா்.

கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பொன்னூா் பகுதியில் சாலையோரம் ஏற்பட்ட நிலச்சரிவால் அந்த சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து சில குடியிருப்புப் பகுதிகளில் சிறு அளவில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.

தொடா் கன மழையால் கூடலூா் பகுதியில் உள்ள பாண்டியாறு புன்னம்புழா, முதுமலை புலிகள் காப்பகத்தின் வழியாகச் செல்லும் மாயாறு, பந்தலூா் பகுதியிலுள்ள பொன்னாணி ஆறு மற்றும் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT