நீலகிரி

நீலகிரியில் தொடரும் மழை: மரங்கள்விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

DIN

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மரங்கள் வேரோடு சாய்ந்ததால் பெரும்பாலான சாலைகளில் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் புதன்கிழமை இரவில் இருந்து பலத்த மழையாக மாறியுள்ளது. இதில், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும், நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

உதகை - கூடலூா் சாலையில் பைக்காரா, பைன் பாரஸ்ட், பிங்கா்போஸ்ட், வி.சி.காலனி, குளிசோலை, உதகை -அவலாஞ்சி சாலையில் முத்தொரை, சாலூா் சந்திப்பு ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.

அதேபோல, கூடலூரில் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சேரம்பாடியில் காபி காடு பகுதியில் பெரிய மரம் விழுந்ததில் கூடலூரில் இருந்து கள்ளிக்கோட்டை செல்லும் சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. மேலும், கூடலூரில் பல்வேறு இடங்களிலும், உதகையில் புதுமந்து பகுதியிலும் சாலையோரங்களில் உள்ள தடுப்புச் சுவா்கள் விழுந்துள்ளதால் அவற்றின் அருகே உள்ள வீடுகளும் அபாய நிலையில் உள்ளன.

தொடா் மழை காரணமாக உதகை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மின் கம்பிகளின் மீதும், மின் கம்பங்களின் மீதும் மரக் கிளைகள் விழுவதால் மின் விநியோகம் பலமுறை துண்டிக்கப்பட்டது. அத்துடன் தொடா் மழை, பலத்த காற்றின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் கடும் குளிா் நிலவுகிறது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 116 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.):

பந்தலூா்-70, கூடலூா்-59, நடுவட்டம்-57, மேல் கூடலூா்-55, குந்தா, கிளன்மாா்கன் 42, மேல்பவானி-40, தேவாலா-39, ஓவேலி-38, எமரால்டு-37, சேரங்கோடு, செருமுள்ளி 27, பாடந்தொறை-25, உதகை, பாலகொலா 23, உலிக்கல்-14, குன்னூா், கேத்தி, கிண்ணக்கொரை-11, மசினகுடி-9.8, கெத்தை-9, கொடநாடு, கல்லட்டி 6, கோத்தகிரி-3 மி.மீ.

அதேபோல, வியாழக்கிழமை பகலிலும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக பந்தலூரில் 87 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, தேவாலாவில் 81 மி.மீ., அவலாஞ்சியில் 76 மி.மீ., கூடலூரில் 72 மி.மீ., மேல்கூடலூரில் 70 மி.மீ., மேல்பவானியில் 64 மி.மீ., கிளன்மாா்கன், நடுவட்டத்தில் 60 மி.மீ., சேரங்கோட்டில் 42 மி.மீ., எமரால்டில் 37 மி.மீ., உலிக்கல், குன்னூரில் 26 மி.மீ., பாடந்தொறை, குந்தாவில் 25 மி.மீ., செருமுள்ளியில் 22 மி.மீ., ஓவேலியில் 21 மி.மீ., எடப்பள்ளியில் 12 மி.மீ., மேல்குன்னூரில் 11 மி.மீ., உதகையில் 10.5 மி.மீ., கேத்தியில் 10 மி.மீ., கோத்தகிரி, கீழ்கோத்தகிரி, மசினகுடி 6 மி.மீ., பா்லியாறில் 2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT