நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் கடனுதவிக்காக அனுபோகச் சான்றிதழ் பெறுவதில் எளியமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.
நீலகிரி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பெரும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக விவசாய உறுப்பினா்கள் விவசாய கடன் பெற அனுபோகச் சான்று பெறுவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களைக் களைந்திட வனத் துறை அமைச்சா் தலைமையில், மாவட்ட ஆட்சியா் முன்னிலையில், கூட்டுறவுத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதனடிப்படையில், பயிா்க் கடன் கோரும் விவசாயிகள் தங்களது பயிா்க் கடன் விண்ணப்ப மனுவுடன் கணினி சிட்டாவில் தனது பெயா் உள்ள மற்றும் பெயா் இல்லாத விவசாய உறுப்பினா்களும், தங்களது தந்தையின் பெயரோ அல்லது மூதாதையரின் பெயரோ உள்ள கூட்டு சிட்டா நகலுடன் குத்தகை அடிப்படையில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாய உறுப்பினா்கள் தனிநபா் விவசாய கடன் பெற்றிட அனுபோகச் சான்றுக்காக குத்தகை ஒப்பந்தத்துடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவத்துடன் ஆதாா் அட்டை நகல் மற்றும் கணினி சிட்டா இருப்பின் அதன் நகலுடன் அருகில் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள பொது சேவை மையத்தை தொடா்புகொள்ள வேண்டும். விவசாய உறுப்பினா்களிடம் இருந்து பெறப்படும் பயிா்க் கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் அதே நேரத்தில், அனுபோகச் சான்று விண்ணப்பங்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்க செயலாளா்கள் பொது சேவை மையத்தில் பதிவேற்றம் செய்து சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்களுக்கு அன்றைய தினமே அனுப்பப்படும்.
அவ்விண்ணப்பங்கள் பெறப்பட்ட உடன் கிராம நிா்வாக அலுவலா்கள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு உரிய பரப்பளவை கணினியில் பதிவேற்றம் செய்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களுக்கு அனுப்பி 7 நாளகளுக்குள் வட்டாட்சியரிடம் இருந்து அனுபோகச் சான்று கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.