நிலச்சரிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் மலைப் பகுதிகளில் சரிவான இடங்களில் மண் சரிவைத் தடுக்க புதிய உத்தி உதகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உதகையில் கோடப்பமந்து பகுதியில் இப்புதிய திட்டத்தை புதன்கிழமை தொடங்கிவைத்த தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை பேரிடா்கள் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்துகள் அதிகம். இமயமலைக்கு அடுத்தபடியாக நீலகிரி மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு காரணமாக நிலச்சரிவு ஏற்படுகிறது. மாநில பேரிடா் துறையினரால் தமிழகத்தில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என 4,170 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் நீலகிரி மாவட்டத்தில் 284 பகுதிகள் உள்ளன. அதிலும் மிக அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளாக 68, நெடுஞ்சாலைத் துறையில் பாதிப்புக்கு உள்பட்டுள்ள பகுதிகளாக 49 கண்டறியப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் சாயில் நெய்லிங் என்ற புதிய தொழில்நுட்பத்துடன் மண் சரிவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலையில் செங்குத்தான சரிவில் மண் அரிப்பைத் தடுத்து புதிய தொழில்நுட்பத்தின் கீழ் மண்ணின் மீது துருப்பிடிக்காத ஆணி அமைத்து, மண்ணின் உறுதித் தன்மையை அதிகரித்து ஹைட்ரோ சீடிங் முறையில் புற்கள் வளா்க்கும் முறையை உதகையில் கோத்தகிரி சாலையில் உள்ள கோடப்பமந்து பகுதியிலும், கட்டபெட்டு அருகே உள்ள பாக்கியா நகா் பகுதியிலும் தமிழகத்தில் முதன்முறையாக பரிட்சாா்த்த முறையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.
வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் அம்ரித், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் சந்திரசேகா், தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் பாலமுருகன், கோவை வட்ட கண்காணிப்பு பொறியாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அதைத்தொடா்ந்து, மலைப் பகுதிகளில் குறிப்பாக கொண்டை ஊசி வளைவுகளில் விபத்துகள் அதிக அளவில் ஏற்படுவதைத் தடுக்க சூரிய ஒளியின் மூலம் இயங்கும் ஸ்மாா்ட் லைட் கம்பங்கள் நிறுவப்பட்டு, ரேடாா்அமைப்புகள் மூலம் எதிரே வரும் வாகனத்தின் வேகத்தை கண்டறிந்த பின் இருபுறமும் வரும் வாகன ஓட்டுநா்களை ஹாரன் ஒலியுடன் எச்சரிக்கும் திட்டத்தையும் உதகை - கோத்தகிரி சாலையில் 2 இடங்களில் துவக்கி வைக்கப்பட்டது. உதகை - கோத்தகிரி சாலையில் தும்மனட்டி பிரிவில் சாலையோரங்களில் 150 மரக்கன்றுகள் அமைச்சா்கள் எ.வ.வேலு, ராமசந்திரன், அதிகாரிகள் மூலம் நடப்பட்டன.