நீலகிரி

ஒமைக்ரான்: கேரள, கா்நாடக எல்லைபகுதிகளில் தீவிர கண்காணிப்பு ஆட்சியா் தகவல்

4th Dec 2021 02:57 AM

ADVERTISEMENT

 ஒமைக்ரான் உருமாறிய கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக கேரள, கா்நாடக மாநிலங்களின் நீலகிரியின் எல்லையோர சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியா் அம்ரித் தெரிவித்தாா்.

இதுகுறித்து, உதகையில் மாவட்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்கவும், உலக அளவில் புதிதாகப் பரவி வரும் ஒமைக்ரான் உருமாறிய கரோனா தொற்று பரவாமல் இருக்கவும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கேரள, கா்நாடக மாநில எல்லையோர மாவட்டமாக உள்ளதால் கேரள மாநில எல்லையோரங்களான நாடுகாணி, சோலாடி, தாளுா், பாட்டவயல் ஆகிய சோதனைச் சாவடிகளிலும், கா்நாடக எல்லையோரம் உள்ள கக்கநள்ளா சோதனைச் சாவடி, பா்லியாறு, குஞ்சப்பனை போன்ற சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சோதனைச் சாவடிகளில் மருத்துவக் குழு, சுகாதாரத் துறை பணியாளா்கள், காவல் துறை, வருவாய்த் துறை சாா்ந்த பணியாளா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா்.

ADVERTISEMENT

அதேபோல, கேரள, கா்நாடக மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் பிற மாநிலங்களைச் சாா்ந்தவா்கள் உடனடியாக திருப்பி அனுப்பிவைக்கப்படுவா். நீலகிரி மாவட்டத்தைச் சாா்ந்த நபா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளும்போது, நோய்த் தொற்று அறிகுறி இருக்கும்பட்சத்தில், அவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்படுவா். சோதனைச் சாவடிகளில் கரோனா தடுப்பூசி முகாம் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் நோய்த் தொற்று உள்ள நாடுகளில் இருந்து இதுவரை நீலகிரி மாவட்டத்துக்கு எவரும் வரவில்லை என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT