நீலகிரி

நீலகிரியில் வலுக்கும் மழை: பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சா் ஆய்வு

DIN

நீலகிரி மாவட்டத்தில் மழை தொடா்ந்து வலுத்து வரும் நிலையில், சேதமடைந்த வீடுகளின் உரிமையாளா்களுக்கு வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் செவ்வாய்க்கிழமை நிவாரணத் தொகைகளை வழங்கினாா்.

பலத்த மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரியின் எல்லைப் பகுதிகளான கூடலூா், பந்தலூரைத் தவிர ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. தொடா் மழை, பலத்த காற்றின் காரணமாக உதகை உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக மைனலா பகுதியில் மரம் சாய்ந்து பழுதடைந்த மின் மாற்றியை சீரமைக்கும் பணிகளையும், பட்டா்கம்பை பகுதியில் சேதமடைந்த சாய் நந்தினி, எப்பநாடு ஊராட்சிக்கு உள்பட்ட மொரக்குட்டி முத்துசாமி நகா் பகுதியில் சேதமடைந்த கணேசன் வீட்டையும் ஆட்சியா் அம்ரித்துடன், அமைச்சா் கா.ராமசந்திரன் அவா்களுக்கு நிவாரணத் தொகைகளை வழங்கினாா்.

இதில், உதகை வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், உதகை வட்டாட்சியா் தினேஷ், உதகை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், ஆறுமுகம் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் எடப்பள்ளியில் 35 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, குன்னூரில் 32 மி.மீ., கோத்தகிரியில் 27 மி.மீ., எமரால்டில் 25 மி.மீ., கேத்தி, கொடநாடு, குந்தாவில் 24 மி.மீ., பாலகொலாவில் 23 மி.மீ., கிண்ணக்கொரை, அவலாஞ்சியில் 22 மி.மீ., பா்லியாறில் 12 மி.மீ., உதகையில் 11.3 மி.மீ., கெத்தையில் 10 மி.மீ., கீழ்கோத்தகிரி, மேல்பவானியில் 8 மி.மீ., மசினகுடியில் 5 மி.மீ., நடுவட்டத்தில் 2 மி.மீ., கல்லட்டியில் 1.3 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

குன்னூா், கோத்தகிரியில்...

குன்னூரில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பரவலான மழையின் காரணமாக மரம் விழுந்ததால் அருவங்காடு, டென்ட்ஹில் போன்ற பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் சாலையில் மிகப்பெரிய மரம் விழுந்ததால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மின் கம்பத்தில் மரம் விழுந்ததால் நீண்ட நேரம் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. இதனால், ஓம் நகா், கஸ்தூரிபா நகா் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

கடும் பனி காரணமாக வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா். பெரும்பாலானோா் பகலிலேயே முகப்பு விளக்குகளுடன் வாகனங்களை இயக்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

SCROLL FOR NEXT