நீலகிரி

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இறந்த பெண் புலியின் அருகே இரண்டு குட்டிகள் மீட்பு

21st Nov 2020 06:54 PM

ADVERTISEMENT

முதுமலை புலிகள் காப்பகத்தில் சிங்காரா வனக்கோட்டத்தில் உயிரிழந்திருந்த பெண் புலியின் சடலத்தின் அருகிலிருந்து இரண்டு ஆண் புலிக்குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் சிங்காரா வனக்கோட்டத்தில் சீமார்குழி ஓடைப்பகுதியில் வனத்துறையினர் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 8 வயதான பெண் புலியின் சடலத்தை கண்டுள்ளனர். இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் சிறீகாந்துக்கு கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறை அலுவலர்கள் அந்த புலியின் சடலத்தை மீட்டு சனிக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்படுமெனவும், புலியின் இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வருமெனவும் கூறியிருந்தனர்.


இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு புலியின் சடலத்திற்கருகிலேயே வனத்துறையினர் பாதுகாப்புக்காக இருந்த சூழலில் சனிக்கிழமை அதிகாலையில் அருகிலிருந்த புதர் ஒன்றிலிருந்து குட்டிகள் கத்தும் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது அந்த புதருக்குள் இரண்டு புலிக்குட்டிகள் இருந்தது தெரியவந்துள்ளது. பிறந்து சுமார் 3 வாரங்கள் ஆகியிருக்கும் இந்த புலிக்குட்டிகள் இரண்டும் ஆண் புலிக்குட்டிகள் என்பதும், இறந்த பெண் புலியின் குட்டிகள்தான் இவை என்பதும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் அப்பகுதிக்கு வந்தார். அதையடுத்து இப்புலிக்குட்டிகள் தொடர்பாக தேசிய புலிகள் ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து பெங்களூருவிலிருந்து புலிகள் ஆணைய அதிகாரிகள் நீலகிரிக்கு விரைந்துள்ளனர். மீட்கப்பட்ட இந்த இரண்டு புலிக்குட்டிகளையும் வன உயிரியல் பூங்கா எதற்காவது கொடுப்பதா அல்லது புலிகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலேயே விட்டு விடுவதா என்பதைக் குறித்து இன்னமும் முடிவெடுக்கப்படாததால் இந்த இரண்டு புலிக்குட்டிகளும் தெப்பக்காட்டிலுள்ள யானைகள் முகாம் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தாய்ப் புலியிடமிருந்து தொடர்ந்து பால் சுரந்து கொண்டேயிருப்பதால் அண்மையில்தான் இப்பெண் புலி இறந்திருக்க வேண்டுமெனவும், மாரடைப்பின் காரணமாக இப்புலி இறந்திருக்கலாமெனவும், குட்டிகள் இரண்டும் ஆரோக்கியமாகவே இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

ADVERTISEMENT


தாய்ப்புலி இறந்தாலும், தனக்கு பதிலாக இரண்டு ஆண் குட்டிகளை அளித்து விட்டு சென்றுள்ள பெண் புலி முதுமலை புலிகள் காப்பகத்தின் வரலாற்று பதிவாக அமைந்துள்ளது. இருப்பினும் அப்புலி இறந்ததற்கு காரணம் மாரடைப்புதானா அல்லது விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்பதைக் குறித்தும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags : nilgiri
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT