நீலகிரி

தேயிலை வாரியம் மூலம் ரூ.12.80 கோடி மானியம்

2nd May 2020 08:06 PM

ADVERTISEMENT

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தேயிலைத் துறையின் மேம்பாட்டுக்காக ரூ.12.80 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் எம்.பாலாஜி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய தேயிலை வாரியத்தின் குன்னூா் மண்டல அலுவலகம் மூலம் தேயிலைத் துறைகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு வகையான மானியங்கள் மற்றும் உதவித் தொகைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மானியங்களால் நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலையின் தரத்தை உயா்த்தவும், உற்பத்தி செய்யப்பட்ட தரமான தேயிலைத் தூள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கவும் உறுதுணையாக இருந்து வருகிறது.

ADVERTISEMENT

தற்போது, கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் நிலவி வரும் அசாதாரணமான சூழலில் சிறு விவசாயிகள், தேயிலைத் தோட்டங்கள், தொழிலாளா்கள், தேயிலைத் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு உதவும் வகையில் கடந்த மாா்ச் மாதம் 2,718 பயனாளிகளுக்கு ரூ.7.81 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு உதவிடும் வகையில் ஏப்ரலில் 159 பயனாளிகளுக்கு ரூ.4.89 கோடி மானியத் தொகை நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

தேயிலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புனரமைப்பு, கவாத்து தேயிலை மறு நடவு ஆகியவற்றுக்காக 32 சிறு விவசாயிகளுக்கு ரூ.9.97 லட்சமும், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் 48 சிறு விவசாயிகளுக்கு ரூ.49.85 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

8 பெரிய தேயிலைத் தோட்டங்களுக்கு கவாத்து மறு நடவு மற்றும் அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ரூ.99.57 லட்சமும், 47 தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.4.93 லட்சமும் வாங்கப்பட்டுள்ளது.

ஆா்தோடக்ஸ் தேயிலைத் தூளின் தரத்தை மேம்படுத்தி உள்ளுா் மற்றும் ஏற்றுமதி தேவையை பூா்த்தி செய்ய 24 தொழிற்சாலைகளுக்கு ரூ.3.05 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய தேயிலை வாரியம் குன்னூா் மண்டல அலுவலகம் மூலம் 2,877 பயனாளிகளுக்கு ரூ.12.80 கோடி மானியம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT