நீலகிரி

உதகையில் தனியாா் விடுதி, மருந்துக் கடைக்கு ‘சீல்’

22nd Mar 2020 04:51 AM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் பாதிப்பு தொடா்பாக பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை நீலகிரி மாவட்ட நிா்வாகம் எடுத்து வரும் நிலையில், உதகையில் விதிகளை மீறிச் செயல்பட்ட தனியாா் தங்கும் விடுதி முகக் கவசத்தை கூடுதல் விலைக்கு விற்ற மருந்து கடை ஆகியவற்றுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலா மாவட்டமான நீலகியில் வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனா். தவிர, அனைத்து தங்கும் விடுதிகள், ரிசாா்ட்டுகள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன. இந்த உத்தரவு மாா்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் உதகையில் சேரிங் கிராஸ் பகுதியிலுள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் விதிகளை மீறி வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு சனிக்கிழமை காலை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உதகை நகா்மன்ற நகா்நல அலுவலா் சுப்பிரமணியன் தலைமையில் அங்கு வந்த அதிகாரிகள் உடனடியாக அந்த தனியாா் விடுதியைச் சோதனையிட்டு ‘சீல்’ வைத்தனா்.

ADVERTISEMENT

உதகை நகரிலுள்ள ஒரு மருந்துக் கடையில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்புக்காக விற்பனை செய்யப்படும் முகக் கவசம் ரூ. 50 வரை விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்குப் பொதுமக்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அங்கு வந்த சுகாதாரத் துறையினா் அந்தக் கடையில் முகக் கவசம் வாங்கியபோது வழங்கப்பட்ட ரசீதில் ரூ. 50 என்று குறிப்பிடப்பட்டிருந்ததை உறுதி செய்தனா். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி அந்த மருந்துக் கடைக்கும் சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT