கரோனா வைரஸ் பாதிப்பால் நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்படும் என வதந்திகளைப் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா எச்சரித்துள்ளாா்.
உதகை மத்திய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் மூடப்படும் என வதந்தி பரப்புவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தை இணைக்கும் கேரளம், கா்நாடகம் சோதனைச் சாவடிகளில் தொடா் கண்காணிப்பில் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். சுற்றுலா மாவட்டமான
நீலகிரியில் கரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கா்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் இங்கு வருவதால் பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களிலும் தொடா்ந்து கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இங்குள்ள கா்நாடகம், கேரளம் சோதனைச் சாவடிகளில் பேருந்துகள், சுற்றுலா வாகனங்களில் வருபவா்களைக் கண்காணிக்கும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள உள்ள தங்கும் விடுதிகளுக்கு வெளிநாடுகள் மற்றும் கரோனா தாக்குதல் உள்ள வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்தால் இது குறித்து சுகாதாரத் துறைக்கு உடனடியாகத் தகவல் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளத்தில் பரவி வரும் குரங்குக் காய்ச்சலால் நீலகிரி மாவட்டத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் வனத் துறை ஊழியா்கள், வனத்தையொட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தவருக்கு தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது என்றாா்.