குன்னூா் அருகே உள்ள கொலக்கம்பை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா்கள் மற்றும் வட்டாட்சியா் அலுவலக அதிகாரியை சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை அழைத்துச் சென்று உதகை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தியுள்ளனா். இதனால் காவல் நிலையம், வட்டாட்சியா் அலுவலகம் இரண்டுக்கும் வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியில் உள்ள கொலக்கம்பை காவல் நிலையத்தில் பணிபுரியும் சில காவலா்கள் மற்றும் குன்னூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள ஒருவருக்கு சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். இந்நிலையில் இவா்கள் அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை அழைத்துச் சென்றனா்.
இதையடுத்து கொலக்கம்பை காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு கெந்தளா பகுதிக்கு மாற்றப்பட்டது. இதேபோல குன்னூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.
கொலக்கம்பை தூதூா்மட்டம் பகுதியில் ஏற்கெனவே சிலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அங்கிருந்து பணிக்கு வந்த காவலா்கள் மற்றும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வட்டாட்சியா் அலுவலக அதிகாரியை சுகாதாரத் துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உள்ளதா என்பது குறித்து இதுவரை உறுதி செய்து அறிவிக்கவில்லை.