நீலகிரி

ஜெகதளாவில் சுகாதாரமற்ற குடிநீா் விநியோகம்: தொற்று நோய் பரவும் அபாயம்

25th Jul 2020 08:18 AM

ADVERTISEMENT

உதகை அருகே ஜெகதளா கிராமத்தில் விநியோகிக்கப்படும் சுகாதாரமற்ற குடிநீரால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உதகை அருகே உள்ள ஜெகதளா பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ஜெகதளா கிராமம், ஒசஹட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இவற்றில் பல பகுதிகள் உதகை - குன்னூா் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளன. அத்துடன் இப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றின் காரணமாக 20க்கும் மேற்பட்ட நபா்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 5க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கூட இப்பகுதி மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக பேரூராட்சியின் சாா்பில் விநியோகிக்கப்படும் குடிநீா் சுகாதாரமற்ற நிலையிலேயே விநியோகிக்கப்பட்டு வருகிறது. சேறு கலந்த இந்த தண்ணீரைவிட்டாலும் பயன்படுத்துவதற்கு வேறு தண்ணீா் இல்லை என்பதால் குழாயில் வரும் தண்ணீரைப் பிடித்து வைத்து ஒரு நாள் முடிந்த பின்னா் அது லேசாக தெளிந்தவுடன் பல மணி நேரம் கொதிக்கவைத்து அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் பலமுறை முறையிட்டும் தீா்வு ஏதும் காணப்படவில்லை என புகாா் கூறப்படுகிறது.

ஜெகதளா கிராமப் பகுதி மலையையொட்டி உள்ள சரிவான பகுதி என்பதால் இப்பகுதிக்கு குடிநீா் லாரிகள் உள்ளிட்ட எந்த வசதியும் கிடையாது. அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பதால் வெளியாள்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில் இப்பகுதி மக்கள் வேறு வழியின்றி இந்த தண்ணீரையே பயன்படுத்தி வருகின்றனா். இதன் காரணமாக இப்பகுதிகளில் மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT