கோத்தகிரி அருகே மெட்டுக்கல் ஆதிவாசி கிராமத்தில், இருளா் பழங்குடியினா் வகுப்பை சோ்ந்த இருவா் வியாழக்கிழமை படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி, மெட்டுக்கல் இருளா் இன கிராமத்தில் பழங்குடியினத்தைச் சாா்ந்த ராமசந்திரன், திம்மன் ஆகிய இருவா் தோட்டக்காவல் பணியின்போது வியாழக்கிழமை இரவு கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டனா்.
இவ்வழக்கை விசாரித்த கோத்தகிரி போலீஸாா், கோத்தகிரியைச் சோ்ந்த பாபு (50), குமாா் (41), குமாா் (55), மூா்த்தி (39), கிருஷ்ணன் (40), மகேந்திரன் (41) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா்.
பாபுவும் திம்மனும் உறவினா்கள் என்பதும் காதல் தகராறு மற்றும் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக திம்மன் கொல்லப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. திம்மனுடன் இருந்த ராமசந்திரனால் விஷயம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அவரையும் கொலையாளிகள் கொன்றுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது.