ஸ்ரீ ஹெத்தையம்மன் கோயில் திருவிழா ஜனவரி 8ஆம் தேதி (புதன்கிழமை) பேரகணி கிராமத்தில் கொண்டாடப்படும் சூழலில் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகா் இன மக்கள் தங்களது குல தெய்வமான ஹெத்தையம்மனுக்கு ஆண்டுதோறும் விழா எடுப்பது வழக்கம். இதில் கலந்துகொள்ள நீலகிரி மட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான படுகா் இன மக்களும் கலந்துகொள்வா். வெகுவிமரிசையாக நடைபெறும் ஹெத்தை அம்மன் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இத்திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள படுக இன மக்கள் கோத்தகிரியில் உள்ள பேரகணியை நோக்கி வரத் துவங்கியுள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவையைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளா்களைக் கொண்டு இயங்கும். மாவட்டத்தில் நடைபெறும் முக்கியத் திருவிழா என்பதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகா் இன மக்கள் வாழ்ந்து வரும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.