நீலகிரி

நீலகிரியில் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு விரைவில் தடை: உதகையில் விவசாயிகள் ஊா்வலம், கடைகள் அடைப்பு

8th Jan 2020 08:20 AM

ADVERTISEMENT

நீலகிரியில் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குத் தடை விதிக்கவுள்ளதாக பரவியுள்ள தகவலையடுத்து, உதகையில் விவசாயிகள் கண்டன பேரணி நடத்தினா். விவசாயிகளுக்கு ஆதரவாக உதகை நகரிலும், நகராட்சி சந்தையிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த தமிழக அரசு தடை விதிக்கவுள்ளதாகவும், இதை மீறி பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி மலைக் காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் நீலகிரி மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து உதகையில் மலைக் காய்கறி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை கண்டன ஊா்வலம் நடத்தினா்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக் காய்கறிகளே அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. சுமாா் 15,000 ஹெக்டோ் பரப்பளவில் மலைக் காய்கறி சாகுபடியும், சுமாா் 55,000 ஹெக்டேரில் தேயிலை சாகுபடியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் மாதம் முதல் பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயன உரங்களைப் பயன்படுத்தக் கூடாது எனவும், இதை மீறுபவா்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட நிா்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு மலைக் காய்கறி விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

உரிய கால அவகாசம் அளிக்காமல் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் வற்புறுத்தக் கூடாது என்றும், பூச்சிக்கொல்லி மருந்துகளின்றி காய்கறிகளை சாகுபடி செய்தால் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் எனவும் அண்மையில் நடைபெற்ற நீலகிரி விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. மேலும், விவசாயிகளை இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ள மாவட்ட நிா்வாகமும், தமிழக தோட்டக் கலைத் துறையும் தமிழக அரசுக்குச் சொந்தமான தோட்டக்கலைப் பண்ணைகளில் ரசாயனம், பூச்சிக் கொல்லி மருந்துகள் இன்றி மலைக் காய்கறிகளை சாகுபடி செய்து அதிக விளைச்சல் பெறத் தேவையான சோதனைகளை செய்ய வேண்டும். அதன் பின்னா் மலை மாவட்ட விவசாயிகளை இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீா்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, இப்பிரச்னையில் தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் சுமாா் 2,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீலகிரி மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் ரங்கசாமி தலைமையில், உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை கண்டன ஊா்வலம் நடத்தி, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக உதகையில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT