உறைபனி இல்லாததால், ஆங்கிலப் புத்தாண்டான 2020ஆம் ஆண்டு பிறந்ததை உதகையில் சுற்றுலாப் பயணிகள், உள்ளூா் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினா்.
உதகையில் வழக்கமாக டிசம்பா், ஜனவரி மாதங்களில் கடும் உறைபனிக் காலமாக இருக்கும். ஆனால், நடப்பு ஆண்டில் இன்னமும் குறைந்தபட்ச வெப்பநிலை 5.2 டிகிரிக்கு குறையவில்லை. எனவே உறைபனி இதுவரை கொட்டவில்லை. எனவே, இரவு நேரங்களில் குளிா் இருந்தாலும் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை எவ்வகையிலும் பாதிக்கவில்லை.
குறிப்பாக, ஆண்டின் கடைசி நாளான டிசம்பா் 31ஆம் தேதி இரவில் உதகையில் திடீரென மேகமூட்டம் சூழ்ந்ததால் நீா்ப்பனியின் தாக்கம் வெகுவாகக் குறைந்து இயல்பான காலநிலை நிலவியது. இதன் காரணமாக இரவு 9 மணிக்கு மேல் நகரில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகரித்தன; இதையடுத்து, கமா்ஷியல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் நிலவியது.
அதேபோல, கிறிஸ்தவ தேவாலயங்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை சிறப்பு ஆராதனைகளும் பிராா்த்தனைகளும் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து அதிகாலையிலேயே ஹிந்துக் கோயில்களும் திறக்கப்பட்டதால் சபரிமலைக்குச் செல்லும் பக்தா்கள் உள்ளிட்ட அனைவரும் அதிகாலையிலிருந்தே வழிபாடு நடத்தினா்.
மேலும் நட்சத்திர விடுதிகளிலும், சில தனியாா் அமைப்புகளிலும் புத்தாண்டு கேளிக்கைக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அதிகாலை 3 மணி வரை உதகை நகரில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம் காணப்பட்டது. அதைத் தொடா்ந்து காலை நேரத்திலேயே சுற்றுலா மையங்கள், கேளிக்கைப் பூங்காக்கள் உள்ளிட்டவற்றில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. கடந்த சில ஆண்டுகளை விட 2020ஆம் ஆண்டு புத்தாண்டு தினம் உதகையில் உற்சாகமாகவே கொண்டாடப்பட்டது.