குன்னூா்: கோத்தகிரி காய்கறி மாா்க்கெட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டெருமை புகுந்ததால் வியாபாரிகள் அச்சமடைந்தனா்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகவே உள்ளது.
குறிப்பாக காட்டெருமைகள் கூட்டம்கூட்டமாக உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளான, மஞ்சூா், குந்தா, தூதா்மட்டம், சேலாஸ் பகுதிகளில் நடமாடி வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனே வெளியே சென்று வரும் நிலை உள்ளது.
இந்நிலையில், கோத்தகிரி காய்கறி மாா்க்கெட்டுக்குள் ஒற்றை காட்டெருமை ஞாயிற்றுக்கிழமை புகுந்தது. பின்னா் அது
அங்கிருந்த கடைகளில் இருந்து காய்கறிகளை நிதானமாக தின்றது. அப்போது அதனை விரட்ட முயன்ற கடைக்காரரைத் தாக்க முயற்சித்தது. இதன் காரணமாக சிலா் தங்களது காய்கறிக் கடைளைத் மூடத் துவங்கினா். சுமாா் அரை மணி நேரம் அப்பகுதியில் இருந்த காட்டெருமை பின்னா் அங்கிருந்து வெளியேறி சோலைக்குள் சென்றது. அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன் வனத் துறையினா் இந்தக் காட்டெருமையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.