உயிலட்டி பகுதியில் தோட்டத்தில் வைக்கப்பட்ட சுறுக்குக் கம்பியில் சனிக்கிழமை சிக்கித் தப்பிச் சென்ற புலியைக் கண்காணிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
கோத்தகிரி அருகே உயிலட்டியில் காய்கறித் தோட்டங்கள், விவசாய நிலங்கள் பல உள்ளன. இந்த த் தோட்டங்களுக்கு வரும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஆங்காங்கே சுறுக்குக் கம்பிகள் வைக்கப்படுவது வழக்கம். அண்மையில் இவ்வழியாக வந்த புலி ஒன்று இந்த சுறுக்குக் கம்பியில் மாட்டிக் கொண்டு 5 மணி நேரம் போராடியது.
புலியின் உறுமல் கேட்டு அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். வன மருத்துவரை கோவையில் இருந்து வரவழைத்து மயக்க ஊசி செலுத்தி புலியைப் பிடிக்க வன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். அதற்குள்ளாக சுறுக்கு தானாகக் கழன்று புலி அங்கிருந்து தப்பிச் சென்றது.
அதன்பின் இரண்டு நாள்கள் டிரோன் மூலம் உயிலட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புலியைத் தேடும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டனா். அது பலனளிக்காமல் போகவே தேடும் பணி கைவிடப்பட்டது.
எனினும், இப்பகுதியில் இரண்டு புலிகளின் நடமாட்டம் இருப்பதால், இவற்றை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று வனத் துறைக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்நிலையில், வனத்தின் பல பகுதிகளில் வனத் துறை சாா்பில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பொது மக்கள் இதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.