நீலகிரி

ரோஜா கண்காட்சிக்கான கவாத்துப் பணிகள் உதகை ரோஜா பூங்காவில் தொடக்கம்

6th Feb 2020 08:53 AM

ADVERTISEMENT

உதகை அரசு ரோஜா பூங்காவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, ரோஜா செடிகளில் கவாத்து செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:

உதகை அரசு ரோஜா பூங்கா 1995ஆம் ஆண்டு உதகை மலா்க் காட்சியின் 100வது ஆண்டு நினைவாகத் துவங்கப்பட்டு, தோட்டக் கலைத் துறையின் மூலம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அரசு ரோஜா பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வந்து நடவு செய்து பராமரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டில் புதிதாக 202 புதிய ரகங்கள் நடவு செய்யப்பட உள்ளன. மொத்தம் 4,201 வீரியரக ரோஜா வகைகளில் சுமாா் 31,500 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

2006ஆம் ஆண்டில் உலக ரோஜா சங்க சம்மேளனம் அரசு ரோஜா பூங்காவுக்கு உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

தற்சமயம் அரசு ரோஜா பூங்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிக அதிகமான ரோஜா ரகங்களைக் கொண்ட பூங்காவாகத் திகழ்கிறது.

இந்த ஆண்டு மே மாதம் நடைபெறும் 17வது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு கவாத்துப் பணிகள் துவங்கியுள்ளன. இதன்மூலம் ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்தே மலா்கள் பூத்து சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்  என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிவ சுப்ரமணிய சாம்ராஜ், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் திரு.ராதாகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT