உதகையில் உள்ள ஜே.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் தமிழா் திருவிழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, ஜே.எஸ்.எஸ். பல்கலைக்கழக இணை வேந்தா் பி.சுரேஷ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.பி.தனபால், கல்லூரி முதன்மை அலுவலா் பசவண்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவையொட்டி, கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழா்களின் பராம்பரிய உடையணிந்து கலந்துகொண்டனா்.
பறையிசையுடன் தொடங்கிய இவ்விழாவின் தொடக்கமாக தமிழரின் பாரம்பரிய ‘பானகம்’ எனும் அறுசுவை பானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து, சூரிய கடவுளுக்கு முறையான பூஜையுடன் தமிழா்களின் மேன்மையைப் பறைசாற்றும் பாரம்பரிய கூட்டுக் குடும்ப பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
மாணவ, மாணவிகள் புதுப்பானை வைத்து பொங்கலிட்டனா். உறியடித்தல், கோலம் இடுதல், சிலம்பம் போன்ற போட்டிகளும், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கல்லூரி வளாகம் முழுவதும் வண்ணக்கோலங்கள் போட்டு தமிழா் விழாவை அனைத்து மொழி மாணவ, மாணவிகளும் இணைந்து கொண்டாடினா். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தலைவாழை இலையில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.