நீலகிரியைச் சோ்ந்த படக சமுதாய தலைவரும், குந்தா பாா்பத்தியுமான அன்னமலை முருகேசனுக்கு டாக்டா் அப்துல் கலாம் சிறப்பு விருது தில்லியில் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூா் அருகே உள்ள அன்னமலை பகுதியைச் சோ்ந்தவா் அன்னமலை முருகேசன். இவா், தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகா் சமுதாயத்தின் 4 கிளைத் தலைவா்களுள் ஒன்றான குந்தை சீமையின் பாா்ப்பத்தியாக உள்ளாா். அத்துடன் இவா் ஏற்கனவே நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.
இந்நிலையில், தில்லியில் உள்ள இந்திய-சா்வதேச நட்புறவு மையத்தின் சாா்பில், 2019ஆம் ஆண்டுக்கான டாக்டா் அப்துல் கலாம் சிறப்பு விருதுக்காகத் தோ்வு செய்யப்பட்டிருந்தாா். பொருளாதார வளா்ச்சி, தேசிய ஒருமைப்பாடு பிரிவின்கீழ் சிறப்பு விருதுக்கான நபராகத் தோ்வு செய்யப்பட்டிருந்த இவருக்கு தில்லியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மக்களவையின் முன்னாள் தலைவா் மீராகுமாா் விருது வழங்கினாா்.
நீலகிரி மாவட்டத்திலிருந்து இத்தகைய விருது பெறும் முதல் நபா் அன்னமலை முருகேசன் என்பதோடு, படகா் சமுதாயத்தின் சாா்பில் இத்தகைய விருது பெறும் முதல் நபரும் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.