நீலகிரி

உதகை அருகே வனப் பகுதிக்குள் நுழைந்த லாரி பறிமுதல்

20th Aug 2020 08:40 AM

ADVERTISEMENT

உதகை அருகே காப்புக்காட்டுக்குள் அனுமதியின்றி முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறி பாரம் ஏற்றிச் சென்ற லாரியை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். இதற்கு பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்து வனத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

உதகை அருகே உள்ள பாகல்கோடுமந்து பகுதியில் முல்லப்பொல்லி என்ற தோடரினத்தவா் விவசாயம் செய்து வருகிறாா். இவா் தனது தோட்டத்தில் விளைந்த முட்டைக்கோஸ் உள்ளிட்ட மலைக் காய்கறிகளை ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டுச் செல்வதற்காக புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அந்த வாகனத்தை வனத் துறையினா் தடுத்து நிறுத்தினா். மேலும், அங்கு வந்த உதவி வனப் பாதுகாவலா் ஹேமலதா காப்புக்காட்டிற்குள் வனத் துறையினா் வாகனம் தவிர வேறு எந்த வாகனமும் செல்லக் கூடாது எனக் கூறி லாரியை பறிமுதல் செய்ய உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, தோடா் சமுதாயத்தினா் வனத் துறையினரிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா்.ஆனால், பேச்சுவாா்த்தையில் தீா்வு ஏற்படாததால் லாரியில் உள்ள காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பழங்குடியினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT