நீலகிரி

சமூக வலைதளங்களில் தவறான தகவல்:ஆட்சியர் புகாரின் பேரில் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு

22nd Sep 2019 04:54 AM

ADVERTISEMENT


நீலகிரி மாவட்ட ஆட்சியர் குறித்து தவறான பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்தார்.
மத மாற்றம் செய்யும் மத போதகர்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் உடந்தையாக உள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் தனியார் கட்டடங்களுக்கு முறையின்றி அனுமதி வழங்கியதாகவும் மாவட்ட ஆட்சியர்  இன்னசென்ட் திவ்யா மீது சமுக வலைதளங்களில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.  
இது பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல் துணை  காவல் கண்காணிப்பாளர் சரவணன் உதகையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
நீலகிரி மாவட்ட ஆட்சியர்  மீது சமுக வலைதளங்களில் தவறான கருத்துகளை சிலர் பரப்பி வருவதாகத் தெரிகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உதகை நகர மேற்கு காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார். 
இந்தப் புகாரின் பேரில், 153, 469, 501, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமுக வலைதளங்களில் ஆட்சியர் மீது தொடர்ந்து தவறான கருத்துகளை பதிவிடுவோர் மற்றும் அவற்றை பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT