உதகையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 219 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெற்றுக்கொண்டு உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 219 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும், கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையில் உள்ள மனுக்களின் மீதும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு துறைரீதியான அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 2019 கோடை விழாவில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் தேவர்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வாழும் நலிவடைந்த ஆதிவாசி மக்களுக்கு வீடுகள் கட்டித் தருவதற்காக திரடப்பட்ட ரூ.5.71 லட்சத்துக்கான காசோலையை தேவர்சோலை பேரூராட்சி செயல் அலுவலர் வேணுகோபாலிடம் ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் கண்ணன், கலால் துறை உதவி ஆணையர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் குருசந்திரன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முஹமது குதுரதுல்லா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.