நீலகிரி

தமிழக அரசிடம் ரூ. 5 கோடி நிதி பெற்று  குன்னூர் ஆற்று நீரை சுத்திகரிக்க ஏற்பாடு: மாவட்ட ஆட்சியர் தகவல்

7th Sep 2019 07:13 AM

ADVERTISEMENT

தமிழக அரசிடம் ரூ. 5 கோடி நிதி பெற்று குன்னூர் ஆற்று நீரை பயன்பாட்டுக்கு உகந்ததாக சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என நீலகிரிமாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரப் பகுதியில் ஓடும் ஆற்றில் கடந்த  பல ஆண்டுகளாக இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு  ஏற்பட்டிருந்தது. இதையடுத்து கிளீன் குன்னூர்  என்ற  தனியார் தொண்டு நிறுவனம்  சார்பில் ஆறு தூய்மைப்படுத்தப்பட்டது.  
மேலும், ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் பொருட்டு மவுண்ட்ரோடு முதல் வி. பி. தெரு வரை 398 மீட்டர் நீளத்துக்கு 7 முதல் 9 அடி உயரம் வரை ரூ. 7 லட்சம் மதிப்பில் வேலி அமைக்கும் பணி மும்பையைச் சேர்ந்த  தனியார் நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. அதன் நிறைவு விழா குன்னூர் நகராட்சி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது. 
இதில் கலந்து கொண்டு  மாவட்ட  ஆட்சியர் பேசியதாவது:
தண்ணீர் மாசுபடுவதை யாரும் அனுமதிக்கக் கூடாது. வீட்டை தூய்மையாக வைத்திருப்பதுபோல நகர் பகுதிகளையும் தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். குன்னூர் ஆற்று நீர் சமவெளிப்பகுதியில் உள்ள பாவனி ஆற்றுக்குச் செல்வதால் இதை தூய்மையாக்க தமிழக அரசிடம் இருந்து ரூ. 5 கோடி நிதி பெற்று  ஆற்று நீர் பயன்பாட்டுக்கு உகந்ததாக சுத்திகரிக்கப்படவுள்ளது. 
குன்னூர் பேருந்து நிலையத்தில் மீதமுள்ள ஆக்கிரமிப்புக் கடைகள் விரைவில் அகற்றப்பட்டு வளர்ச்சிப் பணிகள்  மேற்கொள்ளப்படும். பழங்குடியின கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை தன்னார்வலர்கள் மூலம் தத்தெடுத்து அவர்களுக்குத் தேவையான சத்தான உணவு வகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.    
நிகழ்ச்சியில் மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் தலைவர் தர்சன் ஷா, கோத்ரெஜ்  நிறுவன மேலாண்மை  இயக்குநர் நாதிர் கோத்ரெஜ்,  குன்னூர் சட்டப் பேரவை  உறுப்பினர் சாந்தி ராமு , சுற்றுசுழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT