நீலகிரி

பழங்குடியினரை ஏமாற்றி நிதி மோசடி: வனச் சரகர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு

4th Sep 2019 07:15 AM

ADVERTISEMENT

முதுமலை புலிகள் காப்பகத்தில் வசித்து வந்த பழங்குடியினரை அங்கிருந்து வெளியேற்றி, மறு குடியமர்வு செய்வதற்காக நிலம் ஒதுக்கீடு செய்ததில் நிதி மோசடி செய்ததாக முதுமலை வனச் சரகர் உள்ளிட்ட 9 பேர் மீது 8 பிரிவுகளிலும், பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்ததாவது:
 முதுமலை புலிகள் காப்பகத்தில் வசித்து வந்த மவுண்டாடன் செட்டி என்ற பழங்குடியினரை காப்பகப் பகுதியிலிருந்து வெளியேற்றி தனியாக வேறு இடத்தில் வீடு கட்டித் தருவது அல்லது நிலம் வாங்கித் தருவது என்ற இரண்டு அம்சங்களின் அடிப்படையில் "கோல்டன் ஹேண்ட் ஷேக்' என்ற  திட்டம் வனத் துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 
இதன்படி வெளியேற்றப்படும் ஒவ்வொரு பழங்குடியினரின் குடும்பத்துக்கும் தலா ரூ.10  லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 21 பழங்குடியினர் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற ஒப்புக் கொண்டனர். அதன்பேரில் அவர்களுக்கான புதிய நிலத்தை வாங்கித் தருவதற்காக அவர்களது வங்கிக் கணக்கில் தமிழக அரசு சார்பில் தொகை செலுத்தப்பட்டது. 
 ஆனால் இதற்கான ஆவணங்கள் முதுமலை வனச் சரகராக இருந்த சுரேஷ்குமார், வழக்குரைஞர் சுகுமாரன் ஆகியோரிடம் இருந்துள்ளன. வங்கிக் கணக்கு புத்தகமும் இவர்கள் வசமே இருந்துள்ளது.  மறு குடியமர்வு செய்யப்படுபவர்களுக்கு பட்டா நிலத்தில்தான் புதிதாக வீடு கட்டித் தர வேண்டும் என்ற உத்தரவு இருந்ததால் வனத் துறை சார்பில் ஒரு பட்டா நிலத்தின் வரைபடம் தயாரிக்கப்பட்டு, அதன் பேரில் அரசிடமிருந்து ஒதுக்கீட்டுத் தொகையும் பெறப்பட்டுள்ளது. 
 21 பழங்குடியின குடும்பத்தினருக்கும் மச்சிக்கொல்லி என்ற இடத்தில் 35 முதல் 50 சென்ட் வரையிலான நிலம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களில் பழங்குடியினரிடமிருந்து கையெழுத்துக்குப் பதிலாக  நோட்டரி வழக்குரைஞர் மூலம் கைரேகை மட்டுமே பெறப்பட்டுள்ளது.
 இந்நிலையில் தங்களுக்கு வங்கிக் கணக்கு விவரங்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் வலியுறுத்தியதால் அவர்களிடம் வங்கிக் கணக்குப் புத்தகம் மட்டும் தரப்பட்டுள்ளது. அப்போதுதான் தங்களது கணக்கில் அரசிடமிருந்து பணம் செலுத்தப்பட்டதும், உடனடியாக அந்த பணம் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டதும் அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது. 
 இச்சூழலில் மச்சிக்கொல்லி பகுதியில் வீடு கட்டியவர்கள் தங்களது குடியிருப்புக்கு மின் இணைப்புக்காக விண்ணப்பித்தபோதுதான் அந்த இடம் பட்டா நிலமல்ல என்பதும், பிரிவு 17-க்கு உள்பட்ட - யாராலும் வாங்கவோ, விற்கவோ முடியாத நிலம் என்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக  அப்பகுதி பழங்குடியினர் நலச்சங்கத் தலைவர் சுப்பிரமணியிடம் தெரிவித்த பழங்குடியினர், அவரது அறிவுரையின்பேரில்  பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கண்ணன் என்பவர் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வனிடம் புகார் மனு அளித்தனர். இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ரகசிய விசாரணை நடத்தினர்.  
 இதில் பழங்குடியின மக்களிடம் பிரிவு 17 நிலத்தை ஏமாற்றி விற்பனை செய்தததாக முதுமலை புலிகள் காப்பக வனச் சரகர் சுரேஷ்குமார்,  வழக்குரைஞர் சுகுமாரன்,  நிலத்துக்கான இடைத்தரகர்கள் பேபி, ராதாகிருஷ்ணன், சீனிவாசன், நிலத்தின் உரிமையாளர்களான ஜோசப், பாபு, தாமஸ், நோட்டரி பப்ளிக் ஜெயா ஜோசப் ஆகிய 9 பேர் மீது ஏமாற்றுதல், சதித் திட்டம், மோசடி, போலி ஆவணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழும், பழங்குடியினரின் மீதான வன் கொடுமை சட்டத்தின் கீழும் குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்மணி உத்தரவின் பேரில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  அரசு செயல்படுத்தும் நலத்திட்டத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டது பழங்குடியின மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT