நீலகிரி

கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு  பசுந்தேயிலை வரத்து வெகுவாக குறைவு

4th Sep 2019 07:16 AM

ADVERTISEMENT

நீலகிரியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து வெகுவாக குறைந்து வருவதால் தேயிலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 நீலகிரியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அங்கத்தினர்கள், தனியார் தொழிற்சாலையை நாடி செல்வதால், கூட்டுறவு தொழிற்சாலைக்கு 40 சதவீதம் மட்டுமே இலை வரத்து உள்ளது. நீலகிரியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் குன்னூரில் உள்ள "இன்கோ சர்வ்'  நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளைச் சேர்ந்த 30 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
 இவர்கள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் தேயிலையை அருகில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனர். இதில் ஒரு சில கூட்டுறவு தொழிற்சாலைகளில் தரமற்ற இலைகளை கொள்முதல் செய்து தரமற்ற தேயிலை தூளை உற்பத்தி செய்து சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் ஏலத்தில் எதிர்பார்த்த விலை கிடைப்பதில்லை. தரமாக உற்பத்தி செய்யும் கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கான விலையிலும் தொய்வு ஏற்படுகிறது.
 இதன் காரணமாக உறுப்பினர்கள், தனியார் தொழிற்சாலைகளை நாடி செல்வது அதிகரித்துள்ளது. இதனால், கூட்டுறவு தொழிற்சாலை உறுப்பினர்கள், பசுந்தேயிலை விநியோகத்தை 40 சதவீத அளவுக்கு குறைத்துள்ளனர். மாவட்டத்தில் எப்பநாடு, மேற்கு நாடு, மகாலிங்கா, இத்தலார், கரும்பாலம், கிண்ணக்கொரை உள்ளிட்ட பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகளில் உறுப்பினர்கள் விநியோகிக்கும் தேயிலைக்கு குறிப்பிட்ட நாளில் முன்பணம், விற்பனைத் தொகையை வழங்குவதில்லை.  
 பல கோடி ரூபாய் செலவு செய்து, கூட்டுறவு தொழிற்சாலைகள் புனரமைக்கப்பட்ட நிலையில் தரமான தேயிலை தூள் உற்பத்தி செய்ய தொழிற்சாலை நிர்வாகங்கள் முன்வராததால் பல தொழிற்சாலைகள் மூடும் நிலையை நோக்கி செல்கின்றன.
 எனவே, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையின் நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை 
உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT