நீலகிரி

உதகை குதிரைப் பந்தய மைதான இடமாற்ற விவகாரம்: அனைத்துக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

4th Sep 2019 07:17 AM

ADVERTISEMENT

உதகையில் உள்ள குதிரைப் பந்தய மைதானத்தை கோத்தகிரிக்கு இடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சியினரின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
 உதகை குதிரைப் பந்தய மைதானத்தை கோத்தகிரிக்கு இடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்ட திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் உதகையில் கடந்த 29ஆம் தேதி திமுக மாவட்ட செயலர் பா.மு.முபாரக்  தலைமையில் நடைபெற்றது.
 அப்போது  உதகை நகரின் மையப் பகுதியில் குதிரைப் பந்தய மைதானம் செயல்படுவதால், உதகை நகரில் கடும் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை முறைப்படுத்த நீலகிரி மாவட்ட  நிர்வாகம், குதிரைப் பந்தய மைதானத்தை வாகன நிறுத்தும் வசதிக்காக முறைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. 
 அதைத் தொடர்ந்து நீலகிரியில் வாகன நெரிசலை தவிர்க்க மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை குதிரைப் பந்தய சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.  உயர்நீதிமன்ற நீதிபதிகள் உதகை குதிரை பந்தய மைதானத்தை வேறு இடத்துக்கு மாற்ற ஆலோசனை தெரிவித்துள்ளனர். அப்போது அரசுத் தரப்பில் கோத்தகிரி, கடைகம்பட்டி பகுதியில் குதிரைப் பந்தய மைதானம் அமைக்கலாம் என நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவ்விடத்தை அதிகாரிகளும், குதிரைப் பந்தய சங்க  நிர்வாகமும் பார்வையிடச்  சென்றபோது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அனைத்துக் கட்சியினரின் சார்பில் உதகை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
 அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி, உதகை  குதிரைப் பந்தய சூதாட்டத்தை தடுத்திட மாவட்ட நிர்வாகம் நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும். குதிரைப் பந்தய மைதானத்தை கோத்தகிரியில் கடைகம்பட்டி பகுதிக்கு மாற்ற நினைப்பது முற்றிலும் தவறானது. மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ள கடைகம்பட்டி பகுதி படுக சமுதாய மக்கள் அதிகம் வாழும் பகுதி. இவர்களது குல தெய்வம் ஹெத்தையம்மன் திருவிழா, கலாசார நிகழ்ச்சிகள், இறுதி சடங்குகள் ஆகியவை நடைபெறும் இடமாகும். 
மேலும், இந்த இடத்தை விவசாயம், மேய்ச்சல், விளையாட்டு மைதானமாகவும் பயன்படுத்துகின்றனர். இதே இடத்தில் ஆரம்பப் பள்ளிக்கூடமும், அருகில் மயானமும் உள்ளது. 
 இந்த இடத்தில் குதிரைப் பந்தய சூதாட்டம் நடத்துவதால் இவர்கள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் நீண்டகால கலாசார, சம்பிரதாய நடைமுறைகள் சிதறும். இப்பகுதியில் குதிரைப் பந்தய மைதானம் அமைப்பதை எதிர்த்து, மக்கள், அனைத்துக் கட்சியினர், பொது நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டால் நீலகிரியில் சட்டம், ஒழுங்கு பாதிக்கும் சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 எனவே, சென்னை குதிரைப் பந்தய சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கடைகம்பட்டி பகுதி தங்களுக்கு உகந்ததல்ல என நீதிமன்றத்தில் கூறியதை பயன்படுத்தி உதகை குதிரைப் பந்தய மைதானத்தை கடைகம்பட்டி பகுதிக்கு மாற்ற முயற்சிப்பதை கைவிடுவதோடு, நீலகிரியில் குதிரை பந்தயத்தையே ரத்து செய்யவும், உதகை குதிரை பந்தய மைதானத்தை நீதிமன்றத்தின் மூலம் அரசு வசமாக்கி, வாகன நிறுத்துமிடம் நீலகிரியின் பசுமை மாறாத சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT